வசூலில் முதல்வர் பட்டம் வாங்கும் மந்திரி! | Dinamalar

சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

வசூலில் முதல்வர் பட்டம் வாங்கும் மந்திரி!

Updated : டிச 07, 2020 | Added : டிச 07, 2020 | கருத்துகள் (3)
Share
மழையால், அதிக குளிர் நிலவியதால், நாயர் கொடுத்த இஞ்சி டீ, நண்பர்களுக்கு இதமாக இருந்தது.''புயலிலும் வேலை பார்த்தவருக்கு சிக்கல் வந்திருக்கு ஓய்...'' என, முதல் தகவலுக்கு வந்தார், குப்பண்ணா.''ஏன், என்ன விஷயம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''ஈரோடு மாவட்டம், திருசெங்கோடு, சார் - பதிவாளர் அலுவலகத்துல, பொறுப்பு, சார் - பதிவாளராக, பெண் உதவியாளர் ஒருத்தர் இருக்கார்...
 டீ கடை பெஞ்ச்

மழையால், அதிக குளிர் நிலவியதால், நாயர் கொடுத்த இஞ்சி டீ, நண்பர்களுக்கு இதமாக இருந்தது.''புயலிலும் வேலை பார்த்தவருக்கு சிக்கல் வந்திருக்கு ஓய்...'' என, முதல் தகவலுக்கு வந்தார், குப்பண்ணா.

''ஏன், என்ன விஷயம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''ஈரோடு மாவட்டம், திருசெங்கோடு, சார் - பதிவாளர் அலுவலகத்துல, பொறுப்பு, சார் - பதிவாளராக, பெண் உதவியாளர் ஒருத்தர் இருக்கார்... 'நிவர்' புயல் காரணமா, நவ., 25ம் தேதி, பொது விடுமுறை அறிவிச்சா ஓய்...

''ஆனால், அன்னிக்கும் கூட, சார் - பதிவாளர் பணிக்கு வந்தவரு, 67 பத்திரங்களுக்கு, சரி பார்ப்பு வேலையை முடிச்சிருக்கார்... இது பத்தி கேள்விப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர், அடுத்த நாளே, அங்கே, 'ரெய்டு' நடத்தி, கணக்குல வராத, 4 லட்சம் ரூபாயை பறிமுதல் பண்ணியிருக்கா ஓய்...

''புயல் வீசுன அன்னைக்கும் கூட, வசூல் வேட்டை நடத்தியிருக்கா... இவங்களின், 'நேர்மை'யைக் கண்டு, உயர் அதிகாரிகளே வாய் பிளக்கறாளாம் ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.

அவ்வழியே சென்றவரிடம், ''மாலதி... தனிக்குடித்தனம் போனியே, ரேஷன் கார்டுக்கு, 'அப்ளை' பண்ணிட்டீயா...'' என விசாரித்தார், அந்தோணிசாமி.

''புருஷன் - பொண்டாட்டின்னா இப்படித்தான் இருக்கணும் பா...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார், அன்வர்பாய்.

''நீங்க, பாராட்டுற மாதிரி தெரியலையே... மேல சொல்லுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''திருச்சி, திருவெறும்பூர், டி.எஸ்.பி.,யாக இருப்பவரோட பொண்டாட்டி, 'க்யூ' பிரிவு இன்ஸ்பெக்டராக இருக்காங்க பா...''அந்த, டி.எஸ்.பி., யாக இருப்பவர், மாமுல் வாங்குறது மட்டுமில்லாம பெண்கள் விஷயத்துலயும் ஜாலியான பேர்வழியாம்... அப்படி அவரு வலை வீசினப்ப, ஒரு பெண் போலீஸ் மட்டும், டி.எஸ்.பி.,யை திட்டினதோடு, உயர் அதிகாரிகளுக்கும் புகார் அனுப்பியிருக்காங்க பா...

''ஆனா அந்த புகார், டி.எஸ்.பி.,யோட பொண்டாட்டியின் கவனத்துக்கு தான் போகுது... அதனால அவரு, அந்தப் புகாரை கிழிச்சு போட்டுடுறாராம்... தன் புருஷன் மேல புகார் பண்ணுறவங்கள கூப்பிட்டு, மிரட்டவும் செய்யுறாராம் பா...'' என முடித்தார், அன்வர்பாய்.

தன் மனைவிக்கு, போன் செய்த அண்ணாச்சி, ''சுரேஷ்குமார், சுஜாதா எல்லாம் காலேஜ் போயிட்டாங்களா...'' எனக் கேட்டவர், ''போக்குவரத்து துறை மேல ஏகப்பட்ட புகார் வருது வே...'' என, கடைசித் தகவலுக்கு மாறினார்.

''மேல சொல்லும் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''ஜி.பி.எஸ்., கருவி, ஸ்டிக்கர், ஸ்பீடு கவர்னர் என, பஸ்சுக்கு தேவையானதை, தன் பினாமி கடையில தான் வாங்கணும்னு, அமைச்சர் மறைமுக சட்டம் போட்ட விவகாரம் பெரிசா இருந்துச்சு வே...

''ஆனா அவரு, அதை பத்தியெல்லாம் கவலைப்படாம, அடுத்த வசூலுக்கு தயாராகிட்டார்... இப்போ, வெளிமாநில அங்கீகாரம் இருக்குற ஆம்னி பஸ் உரிமையாளர்களிடம், 3 லட்சம் ரூபாய் வசூல் பண்ணனுமுன்னு உத்தரவு போட்டுருக்காராம் வே...''இப்படியே போனா, வசூலில் முதல்வர் பட்டம் வாங்கிடுவாருன்னு பேசிக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.நண்பர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X