புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே, நான்கு தலைமுறை குடும்பத்தினர் ஒன்றுகூடி, 105 வயது மூதாட்டிக்கு பிறந்த நாள் கொண்டாடினர்.
புதுக்கோட்டை, ஆலங்குடி அருகே, அணவயல் கிராமத்தைச் சேர்ந்த துரைசாமி மனைவி பொன்னம்மாள், 105. தம்பதிக்கு, 70 வயது, 65 வயது, 61 வயதில் மூன்று மகன்கள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன், துரைசாமி காலமானார்.வயதானாலும், மனம் தளராத பொன்னம்மாள், மகன்களின் விவசாய நிலங்களுக்கு தினமும் சென்று, விவசாய வேலைகளை செய்து வருகிறார். இன்றும், தன் தேவைகளை அவரே பூர்த்தி செய்து கொள்கிறார்.
நான்கு தலைமுறை கண்ட பொன்னம்மாளுக்கு, 20க்கும் மேற்பட்ட பேரன், பேத்திகள் உள்ளனர். தற்போது, 105 வயதை எட்டிய பொன்னம்மாள் பிறந்த நாளை, வெகு விமரிசையாக விழா போல் நடத்த, குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதற்காக அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு, உறவினர்களுக்கு வினியோகிக்கப்பட்டது. இதன்படி, நேற்று குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் ஒன்றுகூடி, கறி விருந்து வைத்து, மூதாட்டியின் பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடினர். அனைவரும் பொன்னம்மாளிடம் ஆசிர்வாதம் பெற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE