ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளில் புயல் மழை பாதிப்பு குறித்து சிறப்பு அதிகாரி ராஜேஷ் ஆய்வு செய்தார்.
கன மழை காரணமாக ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி மகசூல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்ரீமுஷ்ணம், குமாரகுடி, கானுார், சாத்தாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் புயல் மழை பாதிப்பு குறித்து சிறப்பு அதிகாரி ராஜேஷ் ஆய்வு செய்தார்.பின், தாலுகா அலுவலகத்தில் நடந்த அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
இதில் கிராம பகுதிகளில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, உரிய விபரங்கள் அளிக்க உத்தரவிட்டார். பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து உடனடியாக அரசு அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும், பொதுமக்களுக்கு வினியோகம் செய்யும் அத்தியாவசிய பொருட்கள் உரிய நபர்களுக்கு செல்கிறதா என கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
தொடர்ந்து ஸ்ரீமுஷ்ணம் பி.பி.ஜெ. கல்லுாரி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களை பார்வையிட்டு, உணவு வழங்கினார். அப்போது, தாசில்தார் ஜெயக்குமார், ஸ்ரீமுஷ்ணம் தாசில்தார் முகமது அசேன், பி.டி.ஓ., க்கள் பாலகிருஷ்ணன், சுந்தரம், இன்ஸ்பெக்டர் வினதா, செயல் அலுவலர் மாதேஸ்வரன் மற்றும் வேளாண்மை, பொதுப்பணி, மின்சாரம், சுகாதாரம், கால்நடை, தீயணைப்பு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE