இந்திய நிகழ்வுகள்
எல்லை தாண்டிய சகோதரிகள்
ஜம்மு: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து, எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியை கவனக்குறைவாக கடந்து, 17 மற்றும் 13 வயது சகோதரிகள் இருவர், ஜம்மு - -காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்திற்குள் நேற்று அதிகாலை வந்தனர். அவர்களை மீட்ட ராணுவத்தினர், திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்
.தீ விபத்தில் 16 பேர் காயம்
மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பை லால்பாக் பகுதியில், ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாம் தளத்தில் உள்ள வீட்டில், நேற்று காலை சமையல், 'காஸ்' கசிவின் காரணமாக, 'சிலிண்டர்' வெடித்து சிதறியது. இதனால் உருவான தீ, மற்ற வீடுகளுக்கும் வேகமாக பரவியது. தீக்காயம் அடைந்த, 16 பேரை தீயணைப்பு படையினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தமிழக சம்பவங்கள்
தேனி அருகே கல்லாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் 6 பேர் சிக்கினர். இதில் 5 பேர் மீட்க்கப்பட்ட நிலையில் ஒருவரை தேடும் பணி ேதொடர்கிறது.
சொத்து தகராறில் தாய் தற்கொலை இரு மகன்கள் கைது
துாத்துக்குடி: சொத்து தகராறில், தாய் தற்கொலை செய்து கொண்டார். அவரது 2 மகன்களை, கொலை வழக்கில், போலீசார் கைது செய்தனர்.
சிறுமி கடத்தி சிறை வைப்பு: ஆட்டோ டிரைவர் கைது
சேலம்: காதலனை தேடி சேலம் வந்த சென்னை சிறுமியை கடத்தி, நண்பன் வீட்டில் சிறை வைத்த, ஆட்டோ டிரைவரை, போலீசார் கைது செய்தனர்.
குழந்தைக்காக கணவர் மறுமணம் செய்ய மறுத்ததால் ஆசிரியை தற்கொலை
திருச்சி: குழந்தைக்காக, கணவர் இரண்டாம் திருமணம் செய்ய மறுத்ததால், அரசுப் பள்ளி ஆசிரியை, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
10 கிலோ வெள்ளி நகை திருட்டு
கிருஷ்ணகிரி: சேலம் மாவட்டம், சிவதாபுரத்தைச் சேர்ந்தவர் வீரமணி, 36; வெள்ளி நகைக் கடையில் பணிபுரிகிறார். இவர், மூன்று பைகளில், 26 கிலோ வெள்ளி நகைகளை, ஆந்திர மாநிலம், செகந்திராபாதுக்கு நேற்று முன்தினம், தனியார் ஆம்னி பஸ்சில் கொண்டு சென்றார்.பஸ், கிருஷ்ணகிரி அடுத்த குந்தாரப்பள்ளியில், தனியார் ஓட்டலில், இரவு உணவுக்காக நிறுத்தப்பட்டது. வீரமணி ஓட்டலில் சாப்பிட்டு திரும்பி வந்தபோது, பஸ்சில், 10 கிலோ வெள்ளி நகைகள் வைத்திருந்த பையை காணவில்லை. அதில் இருந்த நகைகளின் மதிப்பு, 5.25 லட்சம் ரூபாய். குருபரப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
குடும்பத்தை கொல்ல முயன்றவர் கைது
கூடலுார்: நீலகிரி மாவட்டம், கூடலுார் தேவர்சோலை அஞ்சுகுன்னு பகுதியைச் சேர்ந்தவர் ரசாக், 44; கத்தாரில் சமையல்காரராக பணியாற்றினார். இரண்டு வாரங்களுக்கு முன், கூடலுார் வந்து, மனைவி சாஜிதா, 38; மகன்கள் நிஷாத், 20; நியாஷ், 19, ஆகியோருடன் தங்கினார். இரு தினங்களுக்கு முன், மனைவி, மகன்களுடன் தகராறு ஏற்பட்டுள்ளது.ஆத்திரம் அடைந்த ரசாக், மனைவி, மகன்களை வீட்டில் உள்ள அறையில் தள்ளி பூட்டி, ஜன்னல் வழியாக பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். அவர்கள், அறையை உடைத்து தப்பினர். எனினும், சாஜிதா மற்றும் நிஷாத்துக்கு தீ காயம் ஏற்பட்டு, கூடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ரசாக்கை போலீசார் கைது செய்தனர்.
60 சவரன் நகை திருட்டு
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே, நமணசமுத்திரம் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் வசித்து வருபவர் சாந்தி, 50; கணவர் இறந்து விட்டார். இவர், கீழ் வீட்டிலும், கணவரின் அண்ணன் மோகன், மாடியிலும் வசித்து வருகின்றனர்.உறவினர் துக்க நிகழ்ச்சிக்கு, சாந்தி குடும்பத்துடன், நேற்று முன்தினம் வெளியூர் சென்றார். நேற்று காலை, சாந்தி வீட்டு கதவுகள் அனைத்தும் திறந்து இருப்பதை கண்டு, அதிர்ச்சி அடைந்த மோகன், நமணசமுத்திரம் போலீசில் புகார் அளித்தார். சாந்தி வந்து, 60 சவரன் நகைகள் திருட்டு போனதாக தெரிவித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
ஏரியில் மூழ்கி சிறுவன் பலி
உளுந்துார்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த பரியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் மதன், 11; அரசு பள்ளியில், ஆறாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை, வெளியில் சென்ற மதன், வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், பல இடங்களில் தேடினர். அருகில் உள்ள ஏரிக்கு சென்று பார்த்தபோது, சிறுவன் நீரில் மூழ்கி, இறந்த நிலையில் கிடந்தார்.

பள்ளி மேலாளர் கொலை
திண்டுக்கல்: திண்டுக்கல்-, கோவிந்தாபுரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன், 48; அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மேலாளர். கடந்த 4ம் தேதி, பணிக்கு சென்ற மணிகண்டன், வீடு திரும்பவில்லை. நேற்று காலை, ஆர்.எம்., காலனி சாலையில், மின் மயானம் அருகே ரத்த காயங்களுடன் கை, கால்கள் கட்டப்பட்டு இறந்து கிடந்தார். யாரோ கொலை செய்தது தெரிய வந்தது. மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
வீடு இடிந்து இருவர் பலி
பெரம்பலுார்: அரியலுார், இலங்கைச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி, 65; கணவர் இறந்து விட்டார். இரண்டு மகள்களுக்கும் திருமணமாகி விட்டது. முத்துலட்சுமி, குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தார். சில நாட்களாக, இப்பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக, 4ம் தேதி, அவரது வீட்டின் மண் சுவர் இடிந்து, முத்துலட்சுமி மீது விழுந்தது. படுகாயமடைந்த முத்துலட்சுமி, தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில், நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.இதேபோல, விழுப்புரம் மாவட்டம், ஆழியூர் பழைய காலனி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுசீலா, 55; நேற்று முன்தினம் இரவு, வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார். மழையால், நள்ளிரவு வீட்டின் சுவர் இடிந்து விழுந்து, உயிரிழந்தார்.
உலக நிகழ்வுகள்
14 இந்திய ஊழியர்கள் கைது
துபாய்: மத்திய கிழக்கு நாடான ஏமன் கடற்பகுதியில், பிப்ரவரியில், ஓமன் சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது. அதிலிருந்த மோகன்ராஜ் தணிகாசலம் என்ற தமிழர் உட்பட, இந்தியாவை சேர்ந்த, 14 ஊழியர்களை, ஏமன் பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
இந்திய தூதரகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
லண்டன்: இந்திய தூதரகம் முன் விவசாயிகளுக்கான ஆதரவு கோஷம் எழுப்பப்பட்டதையடுத்து தூதரகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE