பொள்ளாச்சி;வறட்சி பகுதியாக மாறியுள்ள, பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தின் மேற்கு பகுதி விளைநிலங்கள் வளம் பெற, பி.ஏ.பி. பாசன திட்டத்தை இப்பகுதிக்கு நீட்டிக்க வேண்டும் என, தமிழக முதல்வரை விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.பி.ஏ.பி., பாசனத் திட்டத்தில், ஒருங்கிணைந்த பொள்ளாச்சி தாலுகாவின் தெற்கு, கிழக்கு மற்றும் தென்மேற்கு பகுதிகள் பயனடைந்து வருகின்றன. இந்நிலையில், தென்மேற்கு பருவமழையை மட்டுமே நம்பியுள்ள புரவிபாளையம், சேர்வகாரன்பாளையம், வடக்கிபாளையம், சூலக்கல், எஸ்.மேட்டுப்பாளையம் மற்றும் தேவராயபுரம் உள்ளிட்ட, 6 ஊராட்சிகளுக்கு உட்பட்ட, 22க்கும் மேற்பட்ட கிராமங்கள், பி.ஏ.பி., திட்டத்தில் சேர்க்கப்படவில்லை.அதனால், தற்போது பாசனத்துக்கு நீரின்றி வறட்சி பகுதியாக மாறியுள்ளது. மண்வளம் மிக்க இப்பகுதியில், நீர் ஆதாரமுள்ள இடங்களில் தென்னைகளும், வறட்சியான மண்ணில் மானாவாரி பயிர்களும் சாகுபடியாகின்றன.இப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து, 25 ஆண்டுகளாக பி.ஏ.பி., திட்டத்தில் சேர்க்க வேண்டும், என, எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதற்காக, மேற்கு பகுதி முன்னோடி விவசாயிகள், அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள், தமிழக அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.கடந்த, சட்டசபை தேர்தலுக்கு முன், வடக்கிபாளையத்தில், 6 ஊராட்சிகளின் விவசாயிகளை ஒருங்கிணைத்து, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தி கோரிக்கையை வலியுறுத்தினர். இதன்விளைவாக, பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் போராட்டக்குழுவினரை சந்தித்து, கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தனர்.ஐந்து ஆண்டுகள் நிறைவடையும் தருணத்தில், இப்பகுதி விவசாயிகளின் பாசன நீர் தேவைக்கான போராட்டத்துக்கு தீர்வு காணப்படவில்லை.முன்னோடி விவசாயிகள் கூறுகையில், 'பி.ஏ.பி., திட்டத்தில், கிழக்குப் பகுதியில் பாசனம் பெற்ற, சுமார், 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தற்போது காற்றாடி நிறுவப்பட்டு, காற்றாலை மின் உற்பத்தி நிலங்களாகவும், குவாரிகள், தொழிற்சாலைகளாக மாறியுள்ளன.சாகுபடி இல்லாத நிலங்களை, பி.ஏ.பி., திட்டத்தில் இருந்து நீக்கி, பாலைவனமாக மாறி வரும், 6 ஊராட்சிகளுக்கு பாசன நீரை திருப்பி, விளை நிலங்களை மீட்டெடுக்க வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்,' என்றனர்.தற்போதைக்கு வாய்ப்பில்லை!அதிகாரிகள் கூறுகையில், 'பி.ஏ.பி., திட்டத்தில் தற்போதுள்ள பாசன பரப்புக்கே போதுமான அளவில் தண்ணீர் வழங்க முடியாத நிலை உள்ளது. கோவை, திருப்பூர் மாவட்டத்தில், வீடுமனை மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டுக்கு மாறிய நிலங்களை நீக்கினாலும், தற்போதுள்ள பாசன நிலத்துக்கு திருப்தியாக தண்ணீர் வழங்க முடியாது.இந்நிலையில், பாசன பரப்பை விரிவுபடுத்தும் திட்டம் இல்லை. பி.ஏ.பி., திட்டத்தில் நிலுவையிலுள்ள, ஆனைமலையாறு - நல்லாறு அணை திட்டம் நிறைவேற்றப்படும்போது, உபரிநீர் எதிர்பார்ப்பின் அடிப்படையில், பொள்ளாச்சியின் வடமேற்கு பகுதி பாசன நிலங்களை சேர்க்க பரிசீலனை செய்யப்படும்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE