உடுமலை:குடிமங்கலம் ஒன்றியத்தில், 'ஜல் ஜீவன்' திட்டப்பணிகளின் தரம் குறித்து, ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள, 23 ஊராட்சிகளிலும், மத்திய அரசின் 'ஜல் ஜீவன்' திட்டத்தின் கீழ், பல்வேறு குடிநீர் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்ட பணிகள், சில கிராமங்களில், தரமில்லாமல், மேற்கொள்ளப்படுவதாக புகார் எழுந்துள்ளது.இது குறித்து பா.ஜ., வினர் சார்பில், திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ள புகார் மனு: அனிக்கடவு ஊராட்சி, நஞ்சேகவுண்டன்புதுார் கிராமத்தில், 'ஜல் ஜீவன்' திட்டத்தில், தரைமட்ட நீர் தேக்க தொட்டி கட்டப்படுகிறது. இத்திட்ட பணிகள் போதிய தரமில்லாமல், மேற்கொள்ளப்பட்டு வருகிறது.ஆளுயரத்துக்கு மழை நீர் தேங்கியிருக்கும் போதே, கான்கிரீட் கொட்டி, பணிகள் செய்கின்றனர். இதனால், விரைவில், உறுதித்தன்மை இழந்து, தொட்டி இடியும் அபாயம் உள்ளது. இது குறித்து ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.எனவே, திட்ட இயக்குனர் தலைமையிலான குழுவினர், நேரடி ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல், இத்திட்டத்தின் கீழ், வீட்டு குடிநீர் இணைப்புக்கு, கட்டணம், வசூலிக்கப்படும் புகார் குறித்தும் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.மத்திய அரசின் சிறப்பு திட்டத்தை பாழ்படுத்தும் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு, மனுவில், தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE