உடுமலை, டிச. 7-
கிராமப்பகுதி அரசு பள்ளி மாணவர்களுக்கான, ஊரக திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது.கல்வியாண்டு தோறும், அரசுத்தேர்வு துறையால் கிராமப்பகுதி மாணவர்களுக்கு, ஊரக திறனாய்வுத் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வுக்கு, ஊரகப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தகுதியுள்ளவர்களாக இருக்கின்றனர். தேர்வு எழுத விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம், ஒரு லட்சத்துக்கும் குறைவானதாக இருக்க வேண்டும். தேர்வுக்கான விண்ணப்பங்கள், இன்று முதல், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பள்ளி தலைமையாசிரியர்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.அந்த விண்ணப்பங்களை மாணவர்களுக்கு வழங்கி, பூர்த்தி செய்து டிச., 14ம் தேதிக்குள், பெற்றோரின் வருமானச்சான்றிதழுடன் திரும்ப பெற வேண்டும். மேலும், மாணவர்களிடம் பெறப்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ஆசிரியர்கள், டிச., 8 முதல் 17ம் தேதி வரை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், பள்ளியில் பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்கள் விபரங்களையும், முதன்மைக்கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு, அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE