ஆனைமலை:வால்பாறைக்கு 'இ- பாஸ்' பெற்று செல்லும் முறை ரத்து செய்யப்பட்டதால், சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு, வால்பாறை, முக்கிய சுற்றுலா பகுதிகளாக உள்ளன. ஆழியாறில், பூங்கா, அணைப்பகுதி, தடுப்பணை, குரங்கு அருவி; வால்பாறையில், சின்னக்கல்லார் அருவி, சோலையாறு அணை, நல்லமுடி பூஞ்சோலை, பாலாஜி கோவில் என, பல்வேறு சுற்றுலா பகுதிகள் உள்ளன.கொரோனா பாதிப்பு காரணமாக, சுற்றுலா பகுதிகள் மூடப்பட்டுள்ளன. ஆனாலும், வால்பாறையின் இயற்கை அழகை ரசிப்பதற்காக, பைக், கார்களில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.கொரோனா பரவலை தடுக்கவும், வால்பாறைக்கு வருவோர் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, அக்., 16ம் தேதி முதல், வால்பாறைக்கு 'இ - பாஸ்' கட்டாயமாக்கப்பட்டது.'இ-பாஸ்' பெறாமல் வருவோரை தடுக்க, ஆழியாறு சோதனைச்சாவடியில் வனத்துறை, வருவாய்த்துறை மற்றும் போலீசார் முகாம் அமைத்து கண்காணிப்பு மேற்கொண்டு வந்தனர்.இந்நிலையில், தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு நேற்று முதல், 'இ - பாஸ்' இல்லாமல் வால்பாறை செல்ல, வருவாய்த்துறையினர் அனுமதியளித்தனர். இதையடுத்து, சுற்றுலா பயணிகள் 'இ-பாஸ்' இல்லாமல், வனத்துறை சோதனைச்சாவடியில் நுழைவுக்கட்டணம் மட்டும் செலுத்தி, வால்பாறை நோக்கி படையெடுத்தனர்.'இ - பாஸ்' ரத்து என்ற தகவலை அறிந்த நுாற்றுக்கணக்கானோர், சோதனைச்சாவடியில் திரண்டனர். ரோட்டோரத்தில் வாகனங்களை நிறுத்தும் சுற்றுலா பயணிகளை கண்காணிக்க, வனத்துறையினர் ரோந்து சென்று வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE