உடுமலை:உடுமலை அருகே, நீர் வழித்தட ஆக்கிரமிப்பால், விவசாய நிலங்களுக்குள் நீர் தேங்கியதால், பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.உடுமலை அருகே, கண்ணமநாயக்கனுார் குட்டை மற்றும் குட்டைக்கு வரும் நீர் வழித்தடம் ஆக்கிரமிக்கப்பட்டு, விவசாய நிலமாக மாற்றப்பட்டுள்ளது. அதே போல், எஸ்.வி.,புரம் - கண்ணமநாயக்கனுார் செல்லும் ரோட்டோரத்திலுள்ள நிலமும், பல கி.மீ., துாரம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் வழித்தடத்தை மீட்க வேண்டும், என பல ஆண்டுகளாக பொது மக்கள் வலியுறுத்தி வந்ததோடு, பல போராட்டங்களும் நடந்தது.வருவாய்த்துறையினர், நீர் வழித்தடத்தை மீட்கும் வகையில், முழுமையாக ஆய்வு செய்து, அளவீடு கல் நட்டனர். ஆனால், ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை.இந்நிலையில், தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக, ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இயற்கையாக அமைந்த குட்டைக்கு செல்லும் நீர் வழித்தடம் அடைக்கப்பட்டதால், ஒரு பகுதியில் தேங்கி, விவசாய நிலம், குடியிருப்புகளில் நீர் தேங்கியது. மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் நாசமடைந்தது.இது குறித்து பொதுமக்கள் புகாரையடுத்து, பி.டி.ஓ., ஜீவானந்தம் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, தேங்கியுள்ள நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.அப்போது விவசாயிகள் தரப்பில், 'அரசுக்கு சொந்தமான நீர் வழித்தட புறம்போக்கு ஆக்கிரமிப்பை அகற்றாமல், மற்ற விவசாய நிலங்கள் மற்றும் ரோடு பாதிக்கும் வகையில், வடிகால் அமைக்கக்கூடாது. சர்வே துறையால் அளவீடு செய்து, கண்டறியப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழை நீரை வெளியேற்ற வேண்டும்,' என்றனர்.அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில், 'தற்போது மழை நீரை வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்படும்; உடனடியாக, அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படும்,'என்றனர். இதனையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE