கோவை:கோவை மாநகராட்சிக்குச் சொந்தமான பூங்கா இடத்தை ஆக்கிரமித்திருப்பவர், வேறொரு இடத்தை தான கிரையம் செய்து விட்டு, நில பரிவர்த்தனை செய்ய முயற்சித்து வருகிறார். அதிகாரிகள் துாங்கி வழிவதால், பூங்கா இடம், இன்று வரை ஆக்கிரமிப்பாளர் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலம், 28வது வார்டில், நில அளவை எண்: 282ல், 5 ஏக்கரில், 54 மனைகளுடன் லே-அவுட் அமைந்திருக்கிறது. 1993ல் உள்ளூர் திட்டக்குழுமத்தில் வரைபட அனுமதி பெறப்பட்டுள்ளது.பூங்காவுக்காக, 21,981 சதுரடி, கடைக்காக, 2,409 சதுரடி ஒதுக்கப்பட்டது. பூங்காவுக்கு ஒதுக்கிய இடம் மற்றும் சாலைக்காக ஒதுக்கிய, 62,090 சதுரடி இடம், (தானப்பத்திர எண்: 1372/93), அப்போதைய சரவணம்பட்டி பேரூராட்சிக்கு தானமாக கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது, மாநகராட்சி வசம் இருக்கிறது.பூங்காவுக்காக ஒதுக்கிய இடத்தை, சரவணம்பட்டி, பெருமாள் கோவில் வீதியை சேர்ந்த ஒருவர் ஆக்கிரமித்து, பூங்காவாகவும், அவரது வீட்டுக்குச் செல்வதற்கான வழித்தடமாகவும் பயன்படுத்தி வருகிறார். இதையறிந்த மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர், அப்பகுதிக்குச் சென்று, 'இது, மாநகராட்சிக்கு சொந்தமான இடம்' என, அறிவிப்பு பலகை வைத்தனர்.
உடனே, 'எனது வீட்டுக்குச் செல்ல வேறு வழியில்லை. பூங்காவாக பராமரித்து வரும் இடத்துக்கு பதிலாக, அதே பகுதியில் அதே பரப்புக்கான இடத்தை, தானக்கிரையம் எழுதி தர தயாராக இருக்கிறோம். எனவே, அந்த நிலத்தை பரிவர்த்தனை செய்து கொடுக்க வேண்டும்' என, உள்ளூர் திட்ட குழுமத்துக்கு அவர் மனு செய்தார்.இதுதொடர்பாக கோப்புகளை ஆய்வு செய்த, உள்ளூர் திட்ட குழும அதிகாரிகள், 'பரிவர்த்தனை செய்ய கோரியுள்ள இடம், மாநகராட்சிக்கு உரிமையாக உள்ளதால், மாநகராட்சி கமிஷனரை அணுகுங்கள்' எனக் கூறி, மனுவை திருப்பி அனுப்பினர்.உடனே, மாநகராட்சி கமிஷனருக்கும் அவர் கடிதம் அனுப்பியுள்ளார். மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர், இதுதொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், கிடப்பில் போட்டு விட்டனர். இதற்கிடையே, சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் முறையீடு தொடர்பாக, ஆறு வாரத்துக்குள், சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். மாநகராட்சி தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட இடம், இன்று வரை தனியார் ஆக்கிரமிப்பில் இருக்கிறது.இதுபோல், மாநகராட்சிக்கு சொந்தமான ஏராளமான நிலம் கேட்பாரின்றி காணப்படுகிறது. அவற்றை மீட்டு, சுற்றிலும் கம்பி வேலி அமைக்க வேண்டும்.போலி ஆவணம் தயாரித்து, பத்திரப்பதிவு செய்வதற்கு முன், கமிஷனர் பெயருக்கு மாற்றி, சொத்து பட்டியலில் சேர்த்து, ஆவணப்படுத்த வேண்டும்.இதற்கான முயற்சிகளில், இனியாவது மாநகராட்சி அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE