கோவை:மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் டவுன்ஹால், மாநகராட்சி வர்த்தக வளாகத்தில் கண்காட்சி நடந்தது.கொரோனா காரணமாக, அனைத்து தொழில் பிரிவுகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளன. மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கும், சந்தை வாய்ப்பு குறைந்தது.இதனை சரி செய்யும் நோக்கில், மகளிர் திட்டம் சார்பில், கடந்த மாதம் 29ம் தேதி முதல், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் மகளிர் சுய உதவிக்குழுவினர், தங்கள் தயாரிப்புகளை விற்பனைக்கு வைத்து வருகின்றனர்.நேற்று, 25க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழுவினர், தங்கள் தயாரிப்புகளை விற்பனைக்கு வைத்தனர். 20 வகை சோப்புகள், மூலிகை குளியல் பொடிகள், குழந்தைகளுக்கான பச்சை பயறு பொடி, கடலை மாவு, தலைக்கு தேய்க்கும் எண்ணெய், அரப்பு, பயறுகள், ஆர்கானிக் கீரை, காய்கறி, மூங்கில் கூடைகள், கைப்பைகள், இயற்கை நாப்கின்கள், செக்கு எண்ணெய் என, பல்வேறு பொருட்கள் இடம் பெற்றன.வெளி சந்தையை காட்டிலும், உற்பத்தி செய்பவர்களிடம் இருந்து நேரடியாக கிடைப்பதால், விலை சற்று குறைவாக இருப்பதாக, வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.இச்சந்தை வாய்ப்பை பயன்படுத்த விரும்பும், மகளிர் சுய உதவிக்குழு பெண்கள், கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, மகளிர் திட்ட அலுவலகத்தை அணுகி, பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE