கோவை:அந்தா...இந்தா என இழுத்துக் கொண்டிருந்த, கோவை மேற்கு புறவழிச்சாலை திட்டத்தின், முதல்கட்ட பணிகள், ஜனவரியில் துவங்கவுள்ளன. இது தொடர்பாக, நெடுஞ் சாலைத்துறைக்கு வருவாய்த்துறை தரப்பில், உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.போக்குவரத்து நெரிசல்களுக்கு தீர்வு காண, 32.43 கி.மீ., நீளத்துக்கு மேற்கு புறவழிச்சாலை அமைக்கப்படவுள்ளது. பாலக்காடு சாலையில் மதுக்கரையில் இருந்து, சுண்டக்காமுத்தூர், பேரூர், செட்டிப்பாளையம், தீத்திபாளையம், மாதம்பட்டி, மேற்கு சித்திரைச்சாவடி, கலிக்க நாயக்கன்பாளையம், சோமையம்பாளையம், வடவள்ளி, பன்னிமடை, குருடம்பாளையம், நஞ்சுண்டாபுரம் வழியாக, நரசிம்ம நாயக்கன்பாளையத்தில் மேட்டுப்பாளையம் சாலையை அடையும் வகையில், திட்டமிடப்பட்டுள்ளது.இத்திட்டத்திற்காக, 2016ம் ஆண்டு, நிலம் கையகப்படுத்த, 320 கோடி ரூபாயும், ரோடு அமைக்க 505 கோடி ரூபாயும் என, 825 கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், 355.5 ஏக்கர் நிலம், 16 கிராமங்களில் கையகப்படுத்த வேண்டும். ஆமை வேகத்தில் நடந்த இதற்கான பணி, தற்போது சூடுபிடித்துள்ளது.இது தொடர்பாக, தீத்திப் பாளையம், மதுக்கரை, பேரூர், செட்டிப்பாளையம், சுண்டக்காமுத்துார், மாதம்பட்டி ஆகிய பகுதிகளில், மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன் தலைமையில், நில உரிமையாளர்களுடன் ஆய்வு கூட்டம் நடந்தது.இதுகுறித்து, வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மேற்கு புறவழிச்சாலை திட்டத்தின் கீழ், ஜன., மாதம் முதல்கட்டமாக, மதுக்கரை முதல் மாதம்பட்டி வரையில், 10 கி.மீ., பணிகள் துவக்கப்படவுள்ளன. இது தொடர்பாக, நெடுஞ்சாலைத்துறைக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.கையகப்படுத்தும் நிலத்துக்கு, வழிகாட்டில் மதிப்பில் இருந்து, கட்டடங்களுக்கு மூன்றரை மடங்கும், மரங்களுக்கு இரண்டரை மடங்கும், இழப்பீடு வழங்கப்படவுள்ளது. தேவையான நிலத்தை கையகப்படுத்தி, நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE