அன்னுார்:எம்.பி., கனிமொழி, வையம்பாளையத்தில் நாராயணசாமி நாயுடு நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். மிகக் குறைந்த போலீசார் மட்டும் இருந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.தி.மு.க., மகளிர் அணி செயலாளரும், எம்.பி.,யுமான கனிமொழி, நேற்று, முன் தினம் இரவு, கோவில்பாளையம் அடுத்த வையம்பாளையத்தில், விவசாயிகள் சங்க நிறுவனர், நாராயணசாமி நாயுடு மணி மண்டபத்திற்கு சென்றார். அங்கே அவரது சிலைக்கு, மாலை அணிவித்து, நினைவிடத்தில் மலர் துாவி, அஞ்சலி செலுத்தினார்.தி.மு.க., மாவட்ட செயலாளர் பையாக்கவுண்டர் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். மிகக் குறைந்த அளவு போலீசார் மட்டுமே இருந்ததால், நினைவிடத்தில், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இதையடுத்து, குரும்ப பாளையத்தில் தனியார் மண்டபத்தில், கல்லுாரி, மாணவ, மாணவியருடன் கலந்துரையாடலில் பங்கேற்றார். மாணவ, மாணவியர், கனிமொழியிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். கபடி, கோகோ போட்டிகளில் மாநில அளவில் சாதித்த வீரர்கள், 'தங்களுக்கு, தமிழக அரசு எந்த ஊக்கமும் தரவில்லை' என புகார் தெரிவித்தனர்.பதிலளித்து கனிமொழி பேசுகையில், ''ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், நீட் தேர்வு ரத்து செய்யப்படும். கல்வி கடனும் ரத்து செய்யப்படும். உள்ளாட்சி அமைப்புகளில், பெண்களுக்கு, 50 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. அதேபோல், எம்.எல்.ஏ., எம்.பி.,தொகுதிகளிலும், 33 சதவீத ஒதுக்கீடு கிடைக்க குரல் கொடுப்போம்,'' என்றார்.நிகழ்ச்சியில், தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார், மாவட்ட நிர்வாகி விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE