அன்னுார்:அன்னுார் வட்டாரத்தில், நான்கு ஊராட்சிகளில், 'மியாவாக்கி' எனப்படும் குறுங்காடுஅமைக்கும் பணி துவங்கியது.எச்.டி.எஃப்.சி., நிதி உதவியுடன், அன்னுார் வட்டாரத்தில், காரே கவுண்டன் பாளையம், வடவள்ளி, குப்பனுார், பொகலுார் ஆகிய நான்கு ஊராட்சிகளில், கூடு தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில், விவசாயிகள் குழு அமைத்தல், பயிற்சி தருதல், நீர்வடிப்பகுதிகளை மேம்படுத்துதல், தடுப்பணை அமைத்தல் ஆகிய பணிகள் நடந்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக, நான்கு ஊராட்சிகளிலும், 10 இடங்களில் குறுங்காடு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. காரே கவுண்டன் பாளையம் ஊராட்சி, கெம்பநாயக்கன்பாளையம் குளத்தில், குறுங்காடு அமைக்கும் பணி துவங்கியது. துவக்க நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் தங்கராஜ் தலைமை வகித்தார்.இதில் கூடு நிறுவனத்தின் செயலாளர் கதிரேசன் பேசியதாவது :ஜப்பானைச் சேர்ந்த மியாவாக்கி என்பவர் குறைந்த இடத்தில், அதிக அளவு மரங்களை நடும் குறுங்காடு முறையை அறிமுகப்படுத்தினார். இது வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்ட செயல்முறை. உலகில் பல நாடுகளில் இதைப் பின்பற்றுகின்றனர். 3 அடி ஆழத்துக்கு குழி தோண்டி அதில் இலைகள், தென்னை ஓலைகள், மாட்டுச்சாணம், காய்கறி கழிவுகள், ஆகியவற்றை நிரப்பி, நீரூற்றி, மண் கொண்டு நிரப்ப வேண்டும்.அதன் பிறகு ஒன்று அல்லது ஒன்றரை அடி இடைவெளிக்கு ஒரு மரக்கன்று நடவேண்டும். வழக்கமாக, 10 ஆண்டுகளில் வளரக்கூடிய மரம், இந்த முறையில், இரண்டு ஆண்டுகளில் வளர்ந்து விடுகிறது. அதிக எண்ணிக்கையில் மரம் இருந்தால், அப்பகுதியில் மழை அதிகமாக பெய்யும். நம் நாட்டில் வனப்பரப்பு தற்போது குறைந்துள்ளது.மரம் நடுவதில் பொதுமக்களிடம் ஆர்வம் இருந்தாலும், தொடர் பராமரிப்பு இல்லாததால் முழுமையான வெற்றி கிடைப்பதில்லை. எனவே, இப்பகுதி உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் இந்த மரம் வளர்வதற்கு, கால்நடைகளால் பாதிக்காமல் இருப்பதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மதுபாலா பேசுகையில், "விவசாயிகள் தங்கள் நிலத்தில் பயன்படாத நிலம் இருந்தால், அங்கும் இது போல் குறுங்காடு அமைக்கலாம். இதனால் வருமானம் அதிகரிக்கும். அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். பசுமை பரப்பு அதிகரிக்கும். குறுங்காடுகள் அமைக்கும் பகுதியில் மழை அளவு அதிகரிக்கிறது,'' என்றார்.அத்திக்கடவு திட்ட ஒருங்கிணைப்பாளர் கணேசன் பேசுகையில், ''குறுங்காடுகள் அமைப்பதால், அந்த இடத்தில், பல்லுயிர்கள் வாழும் சூழ்நிலை ஏற்படும். குறுங்காடுகள் பறவைகளை அதிக அளவு ஈர்க்கும். அதன் பின் அருகே மற்ற இடங்களில், மரங்கள் வளர்வதற்கு பறவைகளே உதவும்,'' என்றார்.நான்கு ஊராட்சிகளில், பத்து இடங்களில், 5 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டமிட்டுள்ளனர். முதல் நாளான நேற்று முன்தினம் வேம்பு, புங்கன், புளி, குமிழ், நாவல் உள்ளிட்ட நாட்டு வகையை சேர்ந்த, 115 மரக்கன்றுகள் நடப்பட்டன.நிகழ்ச்சியில், ஊராட்சி துணைத் தலைவர் குருந்தாசல மூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் ஜெயபால், பொக்லுார், ஊராட்சி தலைவர் நடராஜன், கூட்டுறவு சங்க தலைவர் நாச்சிமுத்து உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE