சூலுார்:சூலுாரில் ரூ.5.30 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பஸ் ஸ்டாண்ட் நேற்று திறக்கப்பட்டது.சூலுார் பேரூராட்சி அலுவலகம் அருகில் உள்ள பழைய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டு, 40 ஆண்டுகளுக்கு மேலானதால், புதிய பஸ் ஸ்டாண்ட் கட்ட முடிவு செய்யப்பட்டது. திருச்சி ரோட்டை ஒட்டி, 2.34 ஏக்கர் பரப்பளவில், ரூ.5.30 கோடி செலவில் பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி இரு ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டது. பணிகள் முடிந்து நேற்று திறப்பு விழா நடந்தது.இங்கு, 12 பஸ்கள் நிறுத்தும் வசதி உள்ளது. மேலும், 19 கடைகள், ஒரு ஓட்டல், பொருட்கள் பாதுகாப்பு அறை, பாலுாட்டும் தாய்மார்கள் அறை, போலீஸ் கட்டுப்பாட்டு அறை, பயணிகள் காத்திருக்கும் அறை, வாகனங்கள் நிறுத்துமிடம், இலவச, கட்டண கழிப்பிடங்கள் உள்ளன.நேற்று நடந்த விழாவில், கலெக்டர் ராஜாமணி தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., கந்தசாமி முன்னிலை வகித்தார்.உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி பஸ் ஸ்டாண்டை திறந்து வைத்து பேசியதாவது:தினசரி 250 பஸ்கள் வந்து செல்லும் வகையிலும், 3 ஆயிரம் பயணிகள் பயன்பெறும் வகையிலும் சூலுார் அம்மா பஸ் ஸ்டாண்ட் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இதன் முலம் தென் மாவட்டங்களுக்கு செல்வது எளிதாகும். சுற்றுவட்டார தொழிலாளர்கள் பயன்பெறுவர். சூலுார் தொகுதியில், ரூ. 200 கோடி மதிப்பில் பல பணிகள் நடக்கின்றன. திருச்சி ரோட்டின் சென்டர் மீடியனில், சூலுார் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 1.75 கி.மீ., துாரத்துக்கு, ரூ.70 லட்சம் செலவில், 70 எல்.இ.டி விளக்குகள் விரைவில் பொருத்தப்படும். இவ்வாறு, அவர் பேசினார்.டி.ஆர்.ஓ., ராமதுரை முருகன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரூபன்சங்கர் ராஜா, ஆர்.டி.ஓ., தனலிங்கம், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் துவாரகநாத் சிங், மாவட்ட சேர்மன் சாந்திமதி, யூனியன் சேர்மன் மாதப்பூர் பாலு, சூலுார் பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE