புதுடில்லி : போர் விமானங்களுக்கு நடு வானில் எரிபொருள் நிரப்பவும் அதே நேரம் 260 பேர் வரை பயணிக்கக் கூடிய அதிக திறன் உடையதுமான 'ஏர்பஸ் 330 எம்ஆர்டிடி' விமானத்தை பிரான்சிடமிருந்து வாங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
போர் விமானங்களுக்கு நடுவானில் எரிபொருள் நிரப்ப ரஷ்யாவைச் சேர்ந்த 'ஐஎல் 76 எம்' ரகத்தைச் சேர்ந்த ஏழு விமானங்களை நம் விமானப் படை தற்போது பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஏர்பஸ் 330 எம்ஆர்டிடி என்ற அதிநவீன விமானத்தை நம் விமானப்படைக்கு விற்பனை செய்ய பிரான்சைச் சேர்ந்த நிறுவனம் தயாராக உள்ளது.

இந்த விமானம் நடு வானில் ஒரே நேரத்தில் இரு விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பக் கூடிய திறன் உடையது. அதே நேரம் 260 பேர் வரை இதில் பயணம் செய்ய வசதி உள்ளது. விமான ஆம்புலன்சாகவும் இதை பயன்படுத்த முடியும். இதனால் ஏற்கனவே 5 - 7 ஆண்டுகள் வரை பயன்படுத்தப்பட்ட ஆறு ஏர்பஸ் 330 ரக விமானத்தை நம் விமானப் படைக்கு விற்பனை செய்ய பிரான்ஸ் நிறுவனம் தயாராக உள்ளது.
இந்த விமானங்கள் இன்னும் 30 ஆண்டுகள் வரை பயன்படுத்தக் கூடிய திறன் உடையவை என அந்நிறுவனம் சான்று அளித்துள்ளது. இந்த விமானங்களை வாங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE