புதுடில்லி : 'கொரோனா தடுப்பூசி நிர்வாகம் தொடர்பாக தேசிய நிபுணர் குழு கூட்டங்களில் வகுக்கப்பட்ட திட்டங்கள் குறித்த ஆவணங்கள் எங்கு உள்ளன என்பது தெரியவில்லை' என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி விநியோகம் குறித்து திட்டங்களை வகுப்பதற்காக 'நிடி ஆயோக்' உறுப்பினர் வி.கே.பால் தலைமையில் தேசிய நிபுணர் குழுவை மத்திய அரசு சமீபத்தில் நியமித்தது. இந்த குழு அவ்வப்போது கூட்டங்களை நடத்தி தடுப்பூசி நிர்வாகம் தொடர்பாக பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் இந்த கூட்டங்கள் எந்தெந்த தேதிகளில் நடந்தது. அதில் வகுக்கப்பட்ட திட்டங்கள் என்ன வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் பகிரப்பட்ட தகவல்கள் உள்ளிட்ட விபரங்களை மனித உரிமை செயற்பாட்டாளர் வெங்கடேஷ் நாயக் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அளிக்க கோரி விண்ணப்பித்தார்.

'அவர் கேட்ட விபரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பகிர வேண்டிய அவசியமில்லை' என மத்திய தகவல் அதிகாரி தெரிவித்தார். இதையடுத்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தில் இவ்விபரங்களை கேட்டு வெங்கடேஷ் நாயக் மேல்முறையீடு செய்தார்.
அவரது கோரிக்கையை பரிசீலித்த அமைச்சகம் இந்த விபரங்கள் மத்திய தகவல் அதிகாரியிடம் இல்லை என்றும் இது குறித்த ஆவணங்கள் எங்கு உள்ளன என்பது தெரியவில்லை என்றும் தெரிவித்தது. மேலும் இவரது மனுவை ஐ.சி.எம்.ஆர். எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியது.
'நாயக் கேட்ட விபரங்கள் எங்களிடம் இல்லை' என ஐ.சி.எம்.ஆர். தெரிவித்தது. 'தேசிய பாதுகாப்பு கருதி அவ்விபரங்களை தர முடியாது' என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
மறு பரிசோதனையில் கொரோனா உறுதி
கொரோனா பரிசோதனையில் 'ராபிட் ஆன்டிஜென் டெஸ்ட்' எனப்படும் விரைவு பரிசோதனை செய்து கொள்ளும் நபர்களுக்கு அறிகுறி இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு 'ஆர்டி - பிசிஆர்' எனப்படும் சளி மாதிரி பரிசோதனையையும் அவசியம் செய்ய வேண்டும் என கடந்த செப்டம்பரில் மத்திய அரசு அறிவுறுத்தியது.
இதையடுத்து கடந்த செப். 1 முதல் நவ. 7 வரை புதுடில்லியில் 'ராபிட் டெஸ்ட்' செய்து தொற்று இல்லை என்று முடிவு அறிவிக்கப்பட்ட 56 ஆயிரம் பேரில் 33 ஆயிரம் பேருக்கு 'ஆர்டி - பிசிஆர்' பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3524 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE