மதுரை : ''இந்தியா முழுக்க பாரதிய கிசான் சங்க உறுப்பினராக உள்ள 46 லட்சம் விவசாயிகள், நாளை (டிச. 8) பஞ்சாப், ஹரியானா, உ.பி., விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள்,'' என சங்க தேசிய செயலாளர் பெருமாள் தெரிவித்துள்ளார்.
மதுரையில் அவர் அளித்த பேட்டி: பஞ்சாப் மாநில அரசு மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களையும் ஏற்காமல் மாநில அளவில்3 புதிய சட்டங்களை இயற்றியுள்ளது. அதில் குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயிகளுக்கான உறுதியான பணப்பட்டுவாடா மற்றும் விவசாய சிறப்பு கோர்ட் அமைப்பதென அதில் தெரிவித்துள்ளது. மத்திய சட்டம் செல்லாது என அங்கே தெரிவித்த பின், பஞ்சாப் விவசாயிகள் ஏன் போராட வேண்டும். அங்கே 1800 தரகு மண்டிகள் மூலம் ஒன்றரை லட்சம் பேர் இடைத்தரகர்களாக செயல்படுகின்றனர்.
இதன் மூலம் ரூ.10ஆயிரம் கோடி அளவிற்கு பணப்பரிவர்த்தனை நடக்கிறது. இவர்கள் சிறிய அளவில் விவசாயம் செய்தாலும் தரகுத் தொழிலில் தான் லாபம் பார்க்கின்றனர்.மண்டி என்ற இடைத்தரகு செயல்பாடு நிறுத்தப்பட்டதால் தான் போராடுகின்றனரே தவிர, உண்மையாக விவசாயிகளுக்காக போராடவில்லை. அரசாங்கம் நெல் மற்றும் பிற பொருட்களை இனிமேல் கொள்முதல் செய்யாது என மற்ற விவசாயிகளை பயமுறுத்தி துாண்டுகின்றனர். உண்மை அப்படியல்ல.
மத்திய அரசு கொண்டு வந்த 3 சட்டங்களில் குறைந்தபட்ச ஆதாரவிலை, உறுதியான பணப்பட்டுவாடா மற்றும் விவசாய சிறப்பு கோர்ட் கேட்டு விவசாய அமைச்சர் நரேந்திரசிங் தோமருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். சட்ட திருத்தத்தில் இந்த மூன்றும் சேர்க்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. புதிய சட்டத்தின் மூலம் விவசாயிகளே செஸ் வரி இன்றி எங்கு வேண்டுமானாலும் பொருளை விற்கலாம் எனும்போது தரகுத் தொழில் செய்பவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இது விவசாயிகளுக்கு லாபமான விஷயம்.மேலும் மூன்று மாநில போராட்டக்காரர்களும் டிச., 9 ஆறாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு சம்மதித்து விட்டு டிச., 8 போராட்டம் நடத்துவது சரியில்லை.
போராட்டத்தால் பாதிக்கப்படுவது விவசாயிகளும் பொதுமக்களும் தான். எங்கள் சங்க உறுப்பினர்கள் தமிழகத்தில் 2 லட்சம் பேரும், இந்தியா முழுக்க 46 லட்சம் பேரும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE