திருப்போரூர் : பெரியவிப்பேட்டில், ஏரியின், 13 கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதால், மழைக்காலங்களில், தண்ணீர் செல்ல வழியின்றி, குடியிருப்பு, விவசாய நிலம் மற்றும் சாலை, வெள்ளக்காடாக மாறி வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கியது பெரியவிப்பேடு ஊராட்சி. இங்கு, 1,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள பெரிய ஏரிக்கு, 13 துணை கால்வாய்கள் உள்ளன.கீரப்பாக்கம், ஒரகடம் உள்ளிட்ட கிராம ஏரிகளில் இருந்து வெளியேறும் நீர், துணை கால்வாய் வழியாக, பெரியவிப்பேடு ஏரிக்கு செல்லும்.இந்நிலையில், மேற்கண்ட கால்வாய்கள், முறையாக பராமரிக்கப்படாததால், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. கால்வாயில், ஆங்காங்கே ஆக்கிரமித்து, சிலர் விவசாயம் செய்து வருகின்றனர்.இதனால், தற்போது பெய்து வரும் மழை நீர், கால்வாயில் செல்ல வழியின்றி, குடியிருப்பு வீடுகள், விவசாய நிலங்கள், சாலையில் சூழ்ந்துள்ளது.
நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று பெய்த மழைக்கு, 50 வீடுகளில், மழை நீர் சூழ்ந்தது; 150 ஏக்கர் நெற்பயிர், வெள்ளத்தில் மூழ்கியது.தவிர, முள்ளிப்பாக்கம் - -திருக்கழுக்குன்றம் இடையே, பெரியவிப்பேடு சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.எனவே, வருவாய், பொதுப்பணித் துறை அதிகாரிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழை நீர் முறையாக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து, பொதுமக்கள் கூறியதாவது:ஆண்டுதோறும், கன மழையின் போது, இது போன்ற வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. பெரியவிப்பேடு ஏரியின், 13 துணை கால்வாய்களை ஆக்கிரமித்ததே இதற்கு காரணம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், கால்வாய் ஆக்கிரமிப்பை கண்டறிந்து, உடனடியாக மீட்க வேண்டும். தவிர, கால்வாய் உயர்மட்டத்தை குறைத்து, தண்ணீர் செல்ல வழி செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE