சென்னை : புத்தாண்டிற்கான காலண்டர் மற்றும் டைரி விற்பனை, தமிழகம் முழுதும் சூடுபிடித்துள்ளது. இந்தாண்டு, முருகன் படம் போட்ட காலண்டர், டைரிக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.
புத்தாண்டு பிறக்கும் போது, வீடுகளில் குறைந்தபட்சம் ஒரு காலண்டராவது இருக்க வேண்டும் என, பொதுமக்கள் கருதுகின்றனர்.தினசரி ராசிபலன், நல்ல நேரம், கோவில் விஷேசங்கள், அமாவாசை, பவுர்ணமி போன்ற பல்வேறு தகவல்களுக்கு காலண்டர்களை பார்ப்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.தினசரி காலண்டரை பொறுத்தவரை, ஹிந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய கடவுள்களின் படங்கள், இயற்கை காட்சிகள், குழந்தைகள் படங்கள் மற்றும் கட்சி தலைவர்களின் படங்களுடன் கூடிய காலண்டர்கள் விற்கப்படுகின்றன.
டைரியை பொறுத்தவரை தனி நபர் உபயோகத்துக்கு வாங்குவோர் எண்ணிக்கை குறைந்து இருந்தாலும், பிறருக்கு அன்பளிப்பாக கொடுக்கும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. கடந்த ஆண்டு, 40 லட்சம் காலண்டர், டைரிகள் விற்பனையாகின. புத்தாண்டை முன்னிட்டு, ஆண்டு தோறும் காலண்டர் மற்றும் டைரிகள் விற்பனை ஓரிரு மாதங்களுக்கு முன்பே சூடுபிடித்து விடும்.இந்த ஆண்டு கொரோனா, புயல், கனமழை என ஒருபுறம் இருந்தாலும், மற்றொரு புறம் காலண்டர் விற்பனை சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. அதிலும் குறிப்பாக, முருகப் பெருமான் படம் போட்ட காலண்டருக்கு மவுசு அதிகரித்துள்ளது.
இதுகுறித்து சென்னை, பிராட்வே, பந்தர் தெருவை சேர்ந்த காலண்டர், டைரி மொத்த உற்பத்தி, விற்பனையாளர் சையத் சுல்தான் கூறியதாவது:தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு, சென்னை பாரிமுனையில் உள்ள மொத்த விலை கடைகளில் இருந்து தான் காலண்டர், டைரிகள் அனுப்பப்படுகின்றன. இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக, தாமதமாகவும், வழக்கத்தை விட குறைந்த அளவும் உற்பத்தி செய்யப்பட்டது. இதனால், காலண்டர், டைரிக்கு, 'டிமாண்ட்' ஏற்பட்டுள்ளது.தனி நபர்கள் மட்டுமின்றி, வங்கிகள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் முகவரியுடன் காலண்டர், டைரிகளை மொத்தமாக வாங்குகின்றனர்.
காலண்டர், டைரி இந்தாண்டு விலையேற்றம் இன்றி விற்கப்படுகிறது. சிறியதும், பெரியதுமான பலவண்ண மினி காலண்டர் விலை, 15 ரூபாய் முதல் மெகா காலண்டர், 400 ரூபாய் வரை கிடைக்கிறது.மேலும், '3டி' காலண்டர் விலை, 140 ரூபாய்க்கும்; புதிய வரவான, 'டூ இன் ஒன்' காலண்டர், 65, 95 ரூபாய் விலையிலும் கிடைக்கிறது. 'டேபிள் டாப்' காலண்டர், 30 ரூபாய் முதல், 65 ரூபாய் வரை விற்கப்படுகிறது.குட்டியாக, 12 டைரிகளுடன் கூடிய, 'இயர் பிளானர்' விலை, 80 ரூபாய்; அதிகாரிகள் விரும்பி பயன்படுத்தும், மன்த்லி மானிட்டர், 60 ரூபாய்க்கு விற்கப் படுகிறது.
ஆண்டு தோறும் கட்சி தலைவர்கள், நடிகர்களின் படங்கள் உள்ள காலண்டர்களை அரசியல் கட்சியினர், ரசிகர் மன்றத்தினர் மொத்தமாக ஆர்டர் செய்வர். ஆனால், இந்த ஆண்டு முன்பதிவில் அவர்கள் ஆர்வம் காட்டவில்லை.இந்த ஆண்டு முருகப் பெருமானின் படங்கள் கொண்ட காலண்டர், டைரிகளுக்கு அதிக மவுசு ஏற்பட்டுள்ளது. அறுபடை வீடு முருகன், குழந்தை முருகன் ஆகிய படங்கள் கொண்ட காலண்டர், டைரிகளை கேட்டு வாங்கி செல்கின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE