சென்னை: கொரோனா தடுப்புக்கான, 'கோவாக்சின்' மூன்றாம் கட்ட பரிசோதனை, சென்னை எஸ்.ஆர்.எம்., மருத்துவ கல்லுாரியில், இன்று (டிச.,07) துவங்குகிறது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்,ஐதராபாதைச் சேர்ந்த, 'பாரத் பயோடெக்' நிறுவனத்துடன் இணைந்து, கொரோனா தடுப்புக்காக, 'கோவாக்சின்' என்ற மருந்தை கண்டுபிடித்து உள்ளது.இந்த மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் இரண்டு கட்ட பரிசோதனைகள், சென்னை, எஸ்.ஆர்.எம்., மருத்துவ கல்லுாரியில் நடந்தன. இதில் வெற்றி கிடைத்ததை அடுத்து, இன்று முதல், மூன்றாம் கட்ட பரிசோதனை துவங்க உள்ளது.இதுகுறித்து, எஸ்.ஆர்.எம்., மருத்துவ கல்லுாரி நிர்வாகிகள் கூறியதாவது:'கோவாக்சின்' மருந்தின் இரண்டு கட்ட பரிசோதனைகளும் வெற்றிகரமாக முடிந்துள்ளன.

இதன் முடிவுகள், இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இதுவரை மருந்து செலுத்தப்பட்ட தன்னார்வலர்களுக்கு, எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு, 1,000 தன்னார்வலர்கள் தேர்வாகி உள்ளனர். உரிய வழிகாட்டுதல்களின்படி, இன்று முதல் பரிசோதனை நடத்தப்பட உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE