சேலம்: பறவைகள், பட்டாம்பூச்சிகளால், வனப்பகுதியில் ஏற்படும் நன்மைகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சேலம் இயற்கை கழகம் சார்பில், வனம் மற்றும் வனம் சார்ந்த உயிரினங்கள், அவைகளின் பயன்பாடு, வாழ்க்கை முறை, பராமரித்தல் குறித்து, அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. குறிப்பாக, ஆண்டுக்கு ஒருமுறை, விலங்குகள் கணக்கெடுப்பு நடத்துகிறது. அதன் வரிசையில், நேற்று பட்டாம் பூச்சி, பறவை இனங்களால், காடுகளுக்கான நன்மைகள் குறித்து, விரிவாக எடுத்துரைக்கப்பட்டன. அதற்கான நிகழ்ச்சி, ஏற்காடு அடிவாரம், வனத்துறை சோதனைச்சாவடி அருகே காலை, 7:30 மணிக்கு நடந்தது. அப்பகுதியில் சுற்றித் திரிந்த பட்டாம்பூச்சிகளை, அடையாளப்படுத்தி காட்டினர். அவைகள் மூலம், மலர்களுக்கு இடையே மகரந்த சேர்க்கை நடப்பதும், அதன் வாழ்விடம், பசுமையான சூழலுக்கு உகந்து காணப்படுவதுடன், மாசு அல்லாத ஆரோக்கியமான சூழல் நிலவும் என, எடுத்து கூறினர். அங்கு வலம் வந்த சின்னான், துடுப்புவால், கரிச்சான் மற்றும் செம்மிசை சின்னான் பறவைகளை அடையாளப்படுத்தி, தேன்சிட்டு பறவைகள் மூலம், மகரந்த சேர்க்கை நடப்பதுடன், விதைப்பரவல் நடந்து, காடுகள் உருவாக காரணமாகி, பின், அடர்ந்த வனப்பகுதியாக மாறும் என்ற விபரங்களை கூறினர். பள்ளி மாணவ, மாணவியர், 13 பேர், இயற்கை கழகத்தினர், வனக்காப்பாளர் அருணகிரி, இயற்கை கழக ஒருங்கிணைப்பாளர் கோகுல் உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE