பனமரத்துப்பட்டி: நெற்பயிரில், ஆனைக்கொம்பன் தாக்குதலை கண்டறிந்து, நோய் மேலாண்மை முறைகளை பின்பற்ற, வேளாண் விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில், 20 ஆயிரத்து, 500 ?ஹக்டேரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. நெற்கதிர் உற்பத்தியாகும் தருவாயில் இருக்கும் பயிரில், ஆனைக்கொம்பன் ஈ தாக்குதல் காணப்படுகிறது. சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், பயிர் பாதுகாப்பு தொழிற்நுட்ப வல்லுனர் சுகன்யா கண்ணா ஆகியோர் கூறியதாவது: ஆனைக்கொம்பன் ஈயின் புழுக்கள், வளரும் நெற்பயிரின் தூர்களை துளைத்து, அதன் உட்பகுதியை சாப்பிடும். அந்த தூர்களில், நெற்கதிர் உற்பத்தி இன்றி வளர்ச்சி பாதிக்கும். நோய் தாக்கிய நெற் பயிர்கள், வெங்காய இலை போலவும், வெள்ளித் தண்டுகள் போலவும் அறிகுறி காணப்படும். நோய் தென்பட்ட வயலில், அறுவடை செய்த பின், நிலத்தை உழவு செய்ய வேண்டும். தழைச்சத்து உரங்கள், பரிந்துரை செய்த அளவு மட்டும் பயன்படுத்த வேண்டும். நோய் தாக்குதலை கட்டுப்படுத்த, ஒரு ஏக்கருக்கு பைப்ரினில், 5 சதவீதம் எஸ்.சி-500 மில்லி அல்லது 0.3 குருணை-4 கிலோ அல்லது தையாமீத்தாக்சாம், 25 டபியுஜி-40 கிராம் என்ற அளவில் தெளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE