தர்மபுரி: ''தகவல் தொழில்நுட்ப பிரிவினர், அரசின் நலத்திட்டங்கள் மற்றும் பணிகளை மக்களிடம் கவனமாகவும், கண்ணியத்துடனும் கொண்டு சேர்க்க வேண்டும்,'' என, அமைச்சர் அன்பழகன் பேசினார். தர்மபுரி மாவட்ட, அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு அலுவலகம் திறப்பு விழா மற்றும் ஆலோசனை கூட்டம், தர்மபுரியில் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி தலைமை வகித்தார். இதில், அமைச்சர் அன்பழகன் பேசியதாவது: அரசு மற்றும் கட்சியின் சாதனைகள், தகவல்களை, மக்களிடமும், கட்சியினரிடமும், பிற கட்சிகள் போன்று, அநாகரிகமான முறையை தவிர்த்து, அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப துறையினர், கண்ணியத்துடன் கொண்டு சேர்க்க வேண்டும். தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி துவங்கலாம். ஆனால், வரும் சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் தொடர்ந்து, மூன்றாவது முறையாக, அ.தி.மு.க., ஆட்சி அமையும். தர்மபுரி மாவட்டத்திலுள்ள, 5 சட்டசபை தொகுதிகளிலும், அ.தி.மு.க., வெற்றி பெறும். இதற்கு, தகவல் தொழில்நுட்ப துறையினர், அனைத்து நிர்வாகிகளுடன் இணைந்து, பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்ப வேலூர் மண்டல செயலாளர் ஜனனி சந்திரசேகர், எம்.எல்.ஏ.,க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், மத்திய கூட்டுறவு வங்கி சேர்மன் வெற்றிவேல், ஆவின் சேர்மன் அன்பழகன் உட்பட, பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE