ஓசூர்: ஜவளகிரி வனச்சரக பகுதியில் கிடந்த, உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. ஓசூர், வனக்கோட்ட பகுதியில், உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்போர், தாங்களாக முன்வந்து அவற்றை வனத்துறை வசம் ஒப்படைத்தால் வழக்குப்பதிவு செய்யப்படாது என, வனத்துறை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனால், கடந்த ஜன., முதல் நவ., 23 வரை மட்டும், அஞ்செட்டி, உரிகம், தேன்கனிக்கோட்டை, ஓசூர், ஜவளகிரி வனச்சரக பகுதிகளில், 38 உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கிகளை, கிராம மக்கள் வனப்பகுதியில் வீசிச்சென்றனர். அவற்றை வனத்துறையினர் கைப்பற்றி, அந்தந்த எல்லைக்கு உட்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். இந்நிலையில், ஜவளகிரி வனச்சரகர் நாகராஜன் தலைமையிலான போலீசார், ஜவளகிரி காப்புக்காட்டில் உள்ள, கக்கமல்லேஷ்வரன் கோவில் அருகே, ரோந்து சென்றனர். அப்போது, அப்பகுதியில் உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கி கிடப்பதை பார்த்து, அதை கைப்பற்றினர். பின்னர், வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களின் அறிவுரைப்படி, தளி போலீசார் வசம், நேற்று முன்தினம் துப்பாக்கி ஒப்படைக்கப்பட்டது. போலீசார், வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE