ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வேளாண் துறை சார்பில், உலக மண்வள நாளில், கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் ஒன்றிய விவசாயிகளுக்கு, மண்வள அட்டைகள் வழங்கப்பட்டன.
அப்போது, மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி பேசியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம், 2 லட்சத்து, 20 ஆயிரத்து, 600 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி நடக்கிறது. பயிர்களுக்கு அளிக்கப்படும் தழை, மணி, சாம்பல் சத்து ஆகியவற்றை, 4:2:1 என்ற விகிதத்தில் இட வேண்டும். ஆனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 5:2:1 என்ற விகிதத்தில் பயிர்களுக்கு, கூடுதலாக தழை சத்து அளிக்கப்படுகிறது. இவ்வாறு மண்ணை பற்றியும், அதன் தன்மை குறித்தும் அறியாமல், தேவைக்கு அதிகமான செயற்கை ரசாயன உரங்களை பயன்படுத்தி, தொடர் சாகுபடி செய்வதால், மண்வளம் குன்றி, பண விரயம் ஏற்படுகிறது. அத்துடன், மகசூலில் பாதிப்பு ஏற்படுகிறது. இதை தவிர்க்க, மண் ஆய்வு மிக அவசியம். மத்திய, மாநில அரசுகள் இணைந்து, மண்வள அட்டை இயக்கத்தை துவங்கி, செயல்படுத்தி வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும். தலா, 5 கிராமங்கள் செயல்விளக்க கிராமங்களாக தேர்வு செய்யப்பட்டு, மொத்தம், 66 கிராமங்களில், 4,351 மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வின் அடிப்படையில் மண்வள அட்டைகள் வழங்கப்படுகின்றன. மண்வள அட்டையின் உர பரிந்துரைகளின் அடிப்படையில், பயிர்களுக்கு தேவையான அளவு மட்டும் உரங்களை பயன்படுத்தி, குறைந்த செலவில் அதிக உற்பத்தி மற்றும் நிறைந்த வருமானம் என்ற இலக்கை அடையலாம். இவ்வாறு, அவர் கூறினார். வேளாண் துறை இணை இயக்குனர் ராஜேந்திரன், துணை இயக்குனர் சண்முகம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE