தர்மபுரி: ''அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பா விவகாரத்தில், உண்மை தெரிந்து கமல் பேச வேண்டும்,'' என, அமைச்சர் அன்பழகன் கூறினார்.
இதுகுறித்து தர்மபுரியில் அவர், நேற்று கூறியதாவது: அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பா விவகாரத்தில், உண்மை நிலை தெரியாமல், கமல் பேசுகிறார். விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டபோது, அதை சந்திக்க தயார் எனக்கூறிய சுரப்பா, இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்துக்கு தொடர்பில்லாத, மதுரையை சேர்ந்தவர் தொடுத்த வழக்கில், தன்னை இணைத்து கொண்டது ஏன்? பேராசிரியர்களை அரசு நியமிப்பது இல்லை என தெரிந்தும், அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில், பேராசிரியர் நியமனத்தில் லஞ்சம் பெற்றாக கூறியதால்தான், முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி மீது, வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து உண்மையை அறிந்து, கமல் அறிக்கை வெளியிடலாம். கல்லூரி, இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு, முதல்வர் மற்றும் அரசு வழிகாட்டுதல் படி நாளை (இன்று) கல்லூரி திறக்கப்படும். செய்முறை தேர்வை, கல்லூரிகளில்தான் செய்ய முடியும் என்பதால், கல்லூரிகள் திறக்கப்படுகிறது. வெளியூர் மாணவர்களுக்கு, போதிய வசதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE