சேலம்: காதலனை தேடி சேலத்துக்கு வந்த சென்னை சிறுமியை கடத்தி, நண்பன் வீட்டில் சிறைவைத்த, பொன்னம்மாபேட்டை ஆட்டோ டிரைவரை, போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மகாபலிபுரம், பூஞ்சோலை, ஈ.சி.ஆர்., ரோட்டை சேர்ந்தவர் சூர்யா, 24; சென்னை, பட்டாபிராமை சேர்ந்த, 15 வயது சிறுமியை காதலித்தார். கடந்த அக்.,10ல், சேலம், வீராணம் அருகே வசிக்கும், தன் சகோதரி பிரியா வீட்டுக்கு அழைத்து வந்தார். மகளை காணவில்லை என்று, பட்டாபிராம் போலீசில், அவரது பெற்றோர் புகாரளித்தனர். இதையறிந்த பிரியா, கணவர் மணிகண்டன் ஆகியோர், சிறுமிக்கு அறிவுரை கூறி, அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் காதலனை பார்க்க முடியாமல் தவித்த சிறுமி, பஸ்சில் புறப்பட்டு, கடந்த, 4ல் சேலம், பொன்னம்மாபேட்டை, ஆட்டோ ஸ்டாண்டுக்கு வந்தார். அங்கிருந்த ஆட்டோ டிரைவர் ஜெகதீஸ், 46, என்பவரிடம், நடந்ததை தெரிவித்தார். அவருடைய மொபைல்போனில் இருந்து, பிரியா மொபைல்போனுக்கு பேசியுள்ளார். உடனே வந்து அழைத்து செல்வதாக கூறிய அவர், அரை மணி நேரத்தில் வந்தார். ஆனால், சிறுமியை காணவில்லை. ஆட்டோ டிரைவரின் மொபைல்போனை, பிரியா தொடர்பு கொண்டபோது, முன்னுக்குப்பின் முரணாக பேசவே, வீராணம் போலீசில் புகாரளித்தார். ஜெகதீஸிடம் விசாரித்தபோது, வீராணம் அருகே தன் நண்பரின் வீட்டில், தனி அறையில் சிறுமியை அடைத்து வைத்திருப்பதாக தெரிவித்தார். சிறுமியை மீட்ட போலீசார், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில், ஜெகதீஸை கைது செய்தனர். சிறுமியை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE