நாமக்கல்: நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், உலக மண்வள தினம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. கே.வி.கே., தலைவர் அகிலா தலைமை வகித்து, மண்வள தினம் கொண்டாடுவதன் அவசியம் குறித்து விளக்கினர். வேளாண் இணை இயக்குனர் அசோகன், தோட்டக்கலை துணை இயக்குனர் கணேசன் ஆகியோர் பங்கேற்று, மண்வள அட்டை வழங்கி, மண் பரிசோதனை அடிப்படையில் உரமிட்டு நல்ல மகசூல் பெற்று, அவற்றை பரவலாக்கம் செய்த விவசாயிகளை பாராட்டினர். மண்வளத்தை மேம்படுத்த, உயர் உரங்களையிட்டு மண்ணில் பல்லுயிர் தன்மையை பாதுகாக்க வலியுறுத்தினர். வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் சத்யா, மண் பரிசோதனையின் அவசியம், மண்வள பாதுகாப்பு உத்திகள் பற்றி விளக்கினார். மாவட்டத்தின் மண்வளம் மற்றும் ஊட்டசத்து குறைப்பாட்டை சரி செய்யும் முறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. நடப்பு ஆண்டு, 'மண்ணை உயிரோட்டம் உள்ளதாக வைத்திருப்போம், மண்ணில் பல்லுயிர்களை பாதுகாப்போம்' என்ற கருத்துருவை அனுசரிக்கும் வகையில், மண் பரிசோதனையின் முக்கியத்துவம், மண்வள மேம்பாடு, மானவாரி காலங்களில், மண்ணில் நீர்ப்பிடிப்பு திறனை மேம்படுத்தும் முறை, மண்வாழ் உயிரினங்களை பாதுகாத்தல் குறித்தும் விளக்கப்பட்டது. மேலும், மண் மற்றும் பாசனநீர் சேகரிக்கும் முறை, விதை நேர்த்தி, தரமான மட்கும் உரம், ஊட்டமேற்றிய நுண்ணூட்டக்கலவை தயாரித்தல், பல்வாழ் உயிரினங்களை பாதுகாத்து மண்ணை உயிரோட்டம் உள்ளதாக வைத்திருத்தல் பற்றிய செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE