நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளில், கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. நேற்றிரவு ஊட்டி, குன்னூர், மஞ்சூர், கோத்தகிரி உட்பட மாவட்டத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்தது. ஊட்டி - கூடலூர் சாலையில், ராட்சத மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஊட்டி நகரில் மார்க்கெட் பகுதி, பஸ் ஸ்டாண்ட், ரயில்வே போலீஸ் ஸ்டேஷன், சேரிங்கிராஸ் உட்பட நகரில் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஊட்டி கோடப்பமந்து கால்வாயில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
மஞ்சூர் அருகே கே ரிங்டன், கோரக்குந்தா, எமரால்டு சாலை, தங்காடு சாலை மற்றும் குன்னூர், கோத்தகிரி சாலைகளில் ஆங்காங்கே சாலையின் குறுக்கே மரங்கள் சாய்ந்தும், மண்சரிவும் ஏற்பட்டது. இதனால், ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பால், நெடுஞ்சாலை மற்றும் தீயணைப்பு மீட்பு குழுவினர் பொக்லைன், பவர் ஷ மெஷின் உதவியுடன் உடனுக்குடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதனால், காலை நேரத்தில் பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர்.
அணை நிலவரம்:
குந்தா, பைக்காரா நீர்மின் திட்டத்தின் கீழ், 13 அணைகள், 30க்கு மேற்பட்ட தடுப்பணைகள் உள்ளன. ஏற்கனவே பெய்த மழைக்கு மின் உற்பத்திக்கு முக்கிய அணையாக கருதப்படும், அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு, பைக்காரா உள்ளிட்ட அனைத்து அணைகளிலும், 95 சதவீதம் தண்ணீர் இருப்பில் உள்ளது, தற்போது பெய்து வரும் மழையால் இன்று காலை, 6.00 மணி நிலவரப்படி, வினாடிக்கு சராசரியாக, 350 முதல் 400 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மழை தொடரும் பட்சத்தில் சில அணைகளை திறந்து உபரி நீரை வெளியேற்ற மின்வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மழை விவரம் (மி. மீ.,)
நீலகிரியில், இன்று காலை, 7.00 நிலவரப்படி, சராசரி மழை அளவு, 21 மி.மீ., பதிவாகியுள்ளது. குன்னூர், 59 மி.மீ., கோத்தகிரி, 35 மி.மீ., ஊட்டி 34 மி.மீ., பதிவாகியுள்ளது. 20க்கும் மேற்பட்ட இடங்களில், 25 மி.மீ., மேல் மழை பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE