சென்னை: 'ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பான விளம்பரங்களில், எச்சரிக்கை வாசகங்களையும் சேர்த்து வெளியிட வேண்டும்' என, தனியார் தொலைக்காட்சிகளுக்கு, மத்திய அரசு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.
ஆன்லைன் விளையாட்டுகளில் பங்கேற்போர், நிதி இழப்பு, அடிமையாவது உள்ளிட்ட பிரச்னைகளை சந்திக்கின்றனர். இவற்றை கட்டுப்படுத்த, மத்திய - மாநில அரசுகள், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கேபிள், 'டிவி' ஒழுங்குமுறை சட்டம், நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள் ஆகியவை அடிப்படையில், நடவடிக்கை எடுக்க, மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இதற்காக, ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பான, ஒளி, ஒலிபரப்புகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து, மத்திய அரசு, தனியார் செயற்கை கோள் தொலைக்காட்சிகளுக்கு பிறப்பித்துள்ள கட்டுப்பாடுகள்:ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பான விளம்பரங்களில், 18 வயதுக்கு குறைவானவர், அதுபோன்ற தோற்றம் அளிப்பவர் பங்கேற்க கூடாது. விளம்பரத்தின், 20 சதவீத இடத்தை, இது தொடர்பான அபாயங்களை சுட்டிக்காட்ட பயன்படுத்த வேண்டும். இந்திய விளம்பர தரநிர்ணய குழு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

'இந்த விளையாட்டில் நிதி அபாயம் உள்ளது; இது அடிமையாக்கக்கூடியது' என்ற, எச்சரிக்கை வாசகம் கட்டாயம் இடம்பெற வேண்டும். ஆன்லைன் விளையாட்டுகளில், வருவாய் வாய்ப்பு, வேலை வாய்ப்பு என்று பொருள்படும் வகையில் விளம்பரங்கள் இருக்க கூடாது. இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE