சென்னை: தனக்கு அறிக்கை நாயகன் என்னும் பட்டத்தை முதல்வர் பழனிசாமி வழங்கியதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதாக கூறிய திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் பழனிசாமிக்கு 'ஊழல் நாயகன்' என்ற பட்டத்தை கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.
சென்னை கொளத்தூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியதாவது: டில்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்துக்கு திமுக தொடர்ந்து தனது ஆதரவை அளிக்கும். வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும். திமுக.,வினரின் போராட்டத்தை அதிமுக.,வினர் தடுக்கின்றனர்.

முதல்வர் பழனிசாமி எனக்கு 'அறிக்கை நாயகன்' என்ற பட்டத்தைக் கொடுத்திருக்கிறார். அதை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். ஏனெனில், எதிர்க்கட்சிகள் அரசியல் தான் செய்யும். ஆளும் கட்சி செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுவதே எதிர்க்கட்சிகளின் வேலை. அந்த வேலையைத் தான் நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம். எனக்கு 'அறிக்கை நாயகன்' பட்டம் என்றால் நான் 'ஊழல் நாயகன்' என்ற பட்டத்தை முதல்வருக்குக் கொடுக்கிறேன்.
சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆணையம் அமைத்திருப்பது அரசியலுக்காக மட்டுமே. தேர்தல் வருவதால் இந்த அறிவிப்பினை விட்டிருக்கிறார்கள். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும். அவரது கொள்கைகளை அறிவிக்கட்டும். அதன் பிறகு நான் கருத்து கூறுகிறேன். திமுகவோடு கூட்டணி வைத்துக்கொள்ள மாட்டேன் என ரஜினி சொன்னதாக எனக்கு தகவல் வரவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE