தமிழக அரசியல் சவால்கள் சமாளிப்பாரா நடிகர் ரஜினி?| Dinamalar

தமிழக அரசியல் சவால்கள் சமாளிப்பாரா நடிகர் ரஜினி?

Added : டிச 07, 2020 | |
கால் நுாற்றாண்டு காலமாக, 'இதோ வந்து விடுவார்; அதோ வந்து விடுவார்' என, தமிழகம் முழுதும் உள்ள ரசிகர்களால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்பை, சமீபத்தில் வெளியிட்டார் நடிகர் ரஜினி. ஆம்; ஜனவரியில் அரசியல் கட்சி துவக்கப் போவதாகவும், அதற்கான முறையான அறிவிப்பு, வரும், 31ல், வெளியிடப்படும் எனவும் கூறியுள்ளார்.அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம், தமிழகம், சட்டசபை தேர்தலை
 தமிழக அரசியல் சவால்கள் சமாளிப்பாரா நடிகர் ரஜினி?

கால் நுாற்றாண்டு காலமாக, 'இதோ வந்து விடுவார்; அதோ வந்து விடுவார்' என, தமிழகம் முழுதும் உள்ள ரசிகர்களால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்பை, சமீபத்தில் வெளியிட்டார் நடிகர் ரஜினி.

ஆம்; ஜனவரியில் அரசியல் கட்சி துவக்கப் போவதாகவும், அதற்கான முறையான அறிவிப்பு, வரும், 31ல், வெளியிடப்படும் எனவும் கூறியுள்ளார்.அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம், தமிழகம், சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், அவரின் இந்த அறிவிப்பு, தமிழக அரசியலில் புதிய சூட்டை கிளப்பியுள்ளது. பல ஆண்டு காலமாக, தமிழக அரசியலில் கோலோச்சி வரும் கட்சிகள் எல்லாம், சற்று கலக்கம் அடைந்துள்ளன.

தமிழகத்தில் நடிகர்களாக இருந்து அரசியலில் குதித்த, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்கள் சாதித்திருந்தாலும், ஆட்சி அதிகாரத்தில், பல ஆண்டுகள் அமர்ந்து, மாநிலத்தை வழி நடத்தி சென்றிருந்தாலும், விஜயகாந்த், கமல்ஹாசன் போன்றவர்களால் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை.இந்தச் சூழ்நிலையில் தான், ரஜினி களம் இறங்கியிருக்கிறார். 'மாத்துவோம், எல்லாத்தையும் மாத்துவோம்; இப்ப இல்லைன்னா, எப்பவுமே இல்லை' என்ற, சினிமா பாணி வசனங்களை அவர் வெளியிட்டுள்ளார். 'தமிழகத்தில், நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி, மதச்சார்பற்ற ஆன்மிக அரசியல் உருவாவது நிச்சயம். வரும் சட்டசபை தேர்தலுக்கு பின், அற்புதம், அதிசயம் நிகழும்' என்றும், நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

தமிழகத்தில், தற்போதுள்ள திராவிட கட்சிகள் இரண்டும், பரஸ்பரம் மாறி மாறி, ஒன்றின் மீது மற்றொன்று ஊழல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து சுமத்தி வரும் நிலையில், 'தமிழகத்தில், தற்போது வெறுப்பு அரசியல் நடக்கிறது.

இந்நிலையை மாற்ற வேண்டும். மற்றவர்கள் குறித்து, எந்த கருத்தும் கூற மாட்டேன். நான் வந்தால், இதை செய்வேன். இதற்காக, அரசியல் கட்சி தொடங்கி இருக்கிறேன். என் மீது பரிபூரண நம்பிக்கை இருந்தால், என் பின்னால் வாருங்கள் என்று தான், மக்களை அழைப்பேன்' என, ரஜினி கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ஜனவரியில் கட்சி துவங்கி, அடுத்த இரண்டு, மூன்று மாதங்களில் சட்டசபை தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ள ரஜினி, அதற்கேற்ற வகையில், தன் ரசிகர்கள் துணையுடன் பலமான கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.

இருந்தாலும், தமிழக வாக்காளர்கள் எப்போதும், கவர்ச்சி அரசியலுக்கும், அறிவிப்புகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என்பதை, கடந்த கால தேர்தல்கள் நிரூபித்துள்ளன.அதனால், திரைப்படத்தில் அதிரடி வசனங்கள் வாயிலாக, மக்களையும், ரசிகர்களையும் கவர்ந்தது போல, கட்சியின் கொள்கை, திட்டங்கள், தேர்தல் அறிக்கைகள் வாயிலாகவும், ரஜினி மக்களை கவர வேண்டும்.

தமிழகத்தில் தற்போதுள்ள ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும், கடந்த சில தேர்தல்களில் வாக்காளர்களை கவர, பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுத்ததாக ஏராளமான புகார்கள் எழுந்தன. சில தொகுதிகளில், தேர்தலை நிறுத்தி வைத்த சம்பவங்களும் அரங்கேறின. இதுபோன்ற சவால்களை எதிர்கொள்ளவும், ரஜினி சரியான திட்டம் வகுக்க வேண்டும்.மேலும், தன் அரசியல் ஆன்மிக அரசியல் என, சில மாதங்களுக்கு முன், ரஜினி அறிவித்த போதே, அதை, தமிழக கட்சிகள் எல்லாம், 'மதவாத அரசியல் என்பதற்கு தான், ரஜினி மாற்றுப் பெயர் சூட்டியுள்ளார் .அவரின் அரசியல் செயல்பாடுகள், மத்தியில் ஆளும் பா.ஜ., கட்சிக்கு சாதகமாகவே இருக்கும்' என, கடும் விமர்சனங்களை முன்வைத்தன.அவற்றை தன் செயல்பாடுகள் மற்றும் பிரசாரங்கள், கொள்கைகள் வாயிலாக, முறியடிக்க வேண்டிய கட்டாயமும் அவருக்கு உள்ளது. அப்போது தான், மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படும்.

இதற்கிடையில், ரஜினி அரசியலில் இறங்குவதால், சட்டசபை தேர்தலில், மூன்றாவது அணி உருவாகும் என்ற யூகங்களும், தற்போதே றெக்கை கட்டி பறக்க துவங்கியுள்ளன. அதனால், இந்த விஷயத்திலும், மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது என முடிவெடுத்தால், அந்த விவகாரத்திலும், அவர் தெளிவான, விமர்சனங்களுக்கு இடமில்லாத முடிவுகளை எடுக்க வேண்டும். சர்ச்சைக்குரிய கட்சிகளையும், அரசியல்வாதிகளையும், தன் கட்சியில் சேர்ப்பதை, அவர் தவிர்ப்பதே சரியான முடிவாக இருக்கும்.இந்திய அரசியலில் திரை நட்சத்திரங்கள் பலர், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களாக தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், அவர்களில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, என்.டி.ராமராவ் போன்ற வெகுசிலர் மட்டுமே, மாநிலத்தின் முதல்வர் பதவியை அலங்கரித்தனர். அந்த வரிசையில், ரஜினியும் இடம் பெற வேண்டும் என்பதே பலரின் விருப்பம்.

அதேநேரத்தில், அரசியலில் அவர் சாதிப்பாரா, மாட்டாரா என்பது ஒரு புறம் இருந்தாலும், அவரின் வருகையால், தமிழக அரசியலில் ஒரு புதிய மாற்றம் உருவாகும் என்பது மட்டுமே நிச்சயம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X