'கிரிமினல்'களின் ஆட்டம் தொடரும்!
கே.சேது,ராமநாதபுரத்திலிருந்து எழுதுகிறார்: பீஹாரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள, 15 அமைச்சர்களில், எட்டு பேர் மீது, 'கிரிமினல்' குற்றச்சா ட்டு உள்ளதாம். அதில், ஆறு பேர் தீவிர குற்றச்சாட்டுக்கு உள்ளாகி, பிணையில் வெளியே வர முடியாமல், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை கிடைக்கக்கூடிய வழக்குகளில் தொடர்புடையோர் என, தெரிய வந்துள்ளது.பீஹார் அமைச்சர்களின் குறைந்தப்பட்ட சொத்து மதிப்பு, 1 கோடி ரூபாயாம்.இப்படிப்பட்டோர், தேர்தலில் எப்படி வெற்றி பெற்றிருப்பர் என, சொல்ல வேண்டியதில்லை.பணம் மற்றும் அதிகார பலம்,அடாவடி, மிரட்டல் மூலமே, வெற்றியை பறித்திருப்பர். இனி, இவர்கள் மீதுள்ள வழக்குகள் எல்லாம், செயல்படவா போகிறது? எல்லாம் முடங்கி விடும்.பீஹாரில் மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களிலும், இதே நிலை தான் இருக்கிறது. செல்வந்தரும், ரவுடியும் தான், பிரபல கட்சியின் வேட்பாளராக களமிறங்குகின்றனர்.இனி காமராஜர், கக்கன் மாதிரியான தலைவர்களை, நாம் பார்க்கப் போவதில்லை. 'ஊரை அடித்து உலையில் போடுடா...' எனக் கூறும் ஆசாமிகள் தான், அரசியலில் உள்ளனர்.மகாத்மா காந்தி உட்பட பலரின் தியாகத்தால் பெற்ற சுதந்திரமும், ஜனநாயகமும், இப்போது இப்படிப்பட்டோர் கையில் தான், சிக்கி இருக்கின்றன.கிரிமினல் வழக்கு உள்ளோர், தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சட்டத்தை, அமல்படுத்தலாம்; ஆனால், எந்த கட்சியும் இதை ஆதரிக்காது. அனைத்து கட்சிகளிலும், கிரிமினல்கள் உள்ளனர்.தேர்தலில் ஓட்டு போடும் போது, மக்கள் சிறிதாவது சிந்தித்து செயல்பட்டால் தான், நாட்டிற்கு நல்லது. அதை விடுத்து பணத்திற்கு மயங்கியும், அதிகாரத்திற்கு பயந்தும் ஓட்டு போட்டால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, கிரிமினல்களின் ஆட்டம் தான் நடக்கும்.
அவர்கள்திருந்தவேமாட்டார்கள்!
க.அருச்சுனன், செங்கல்பட்டிலிருந்து எழுதுகிறார்: தமிழகத்தில் நீக்கமற நிறைந்திருப்பது, லஞ்சம் தான் என்றால், அது மிகையல்ல. வருவாய், போக்குவரத்து, பத்திரப் பதிவு, கனிம வளம் என, எங்கும் லஞ்ச பேர்வழிகள் நிறைந்திருக்கின்றனர்.அதிகாரிகளுக்கு லஞ்சம் தர மறுத்தால், நாம் விண்ணப்பித்த மனு, ஏதேனும் காரணத்தால் வேண்டுமென்றே நிராகரிக்கப்படும் என்பதால் தான், மக்கள் பணம் கொடுக்கின்றனர்.அனைவராலும், லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிக்கு எதிராக போராட முடியாது. லஞ்சம் வாங்குவதில், அரசு அதிகாரிகள், பட்டம் வாங்கியுள்ளனர். உதாரணமாக, வட்டார போக்குவரத்து துறை அதிகாரி, இப்போதெல்லாம் நேரடியாக பணம் வாங்குவதில்லை.
ஒரு குறிப்பிட்ட, 'டிரைவிங் ஸ்கூல்' நிறுவனத்தை அணுகச் சொல்வார்; அங்கு சென்று, லஞ்சம் கொடுக்க வேண்டும்.அரசு ஊழியர் பணம் வைத்திருந்தால் மட்டுமே, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்வார்; தனியாரிடம் பணம் இருந்தால், ஒன்றும் செய்ய முடியாது என்பதால், இந்த ஏற்பாடு.நம் பிரதமரின் ஊதியத்தை விட, பத்திரப்பதிவு அலுவலர் பெறும் லஞ்ச தொகை மிக அதிகம்.முன்பெல்லாம், லஞ்சம் வாங்குவோரை, நேரடியாக சென்று, போலீசார் கைது செய்யலாம். இப்போது அப்படி எல்லாம் முடியாது.லஞ்சம் பெறும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட துறையின் உயர் அதிகாரியிடம் சென்று, லஞ்ச ஒழிப்புத்துறையினர் அனுமதி வாங்க வேண்டும்.இந்த கொடுமையை எல்லாம் என்னவென்று சொல்வது?சமீபத்தில், தியாகி பென்ஷன் தொடர்பான வழக்கு ஒன்றில், '99 வயது முதியவரை, 23 ஆண்டுகள் அலையவிட்ட அதிகாரிகள் வெட்கப்பட வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் அனல்
கக்கியிருக்கிறது.'பத்திரப்பதிவு துறை எழுத்தர்கள், லஞ்சம் வாங்கி தரும் ஏஜென்டுகளாக செயல்படுகின்றனர். வருவாய் துறையிலிருந்து தான், லஞ்சமே துவங்குகிறது' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கோபம் காட்டினர்.'விளைபொருட்களை விற்க முடியாமல் தவிக்கும் விவசாயிகளிடம், அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது, பிச்சை எடுப்பதற்கு சமம்' என,நீதிமன்றம் கூறியது.என்ன சொன்னாலும், இந்த அதிகாரிகள் திருந்தவே மாட்டார்கள்.
எண் ஒன்றை அழுத்தவும்!
உ.பாலமுருகன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நம் நாட்டில், வாடிக்கையாளர் சேவை மையத்தால், எரிச்சல் அடையாதவர் என்று, எவருமே இருக்க முடியாது.ஒரு வாடிக்கையாளர், மொபைல் போன் வழியாக, சேவை மையத்தை எதற்காக நாடுவார்... தன் சொந்த கதை, சோகக் கதை பேசவா?அவசர தேவை அல்லது நிறுவனத்தின் சேவை மீது தோன்றும் சந்தேகத்தை நிவர்த்தி செய்யத் தான், வாடிக்கையாளர் சேவை மையத்தைஅணுகுவார்.
மொபைல் போனில், யாரை வேண்டுமானாலும் எளிதில் தொடர்பு கொள்ள முடியும். ஆனால், இந்த வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியை தொடர்பு கொள்ள மட்டும், ஏழு மலை, ஏழு கடல் கடந்து காத்திருக்க வேண்டும்.அவசர தேவைக்காக, வாடிக்கையாளர் சேவை மைய எண்ணை தொடர்பு கொண்டால், தமிழில் தொடர, எண் இரண்டை அழுத்தவும்... அடுத்து நான்கு, ஐந்து, ஏழு... என, அனுமன் வால் போல நீண்டபடியே செல்லும்.இடையில், தவறான எண்ணை அழுத்திவிட்டால் போச்சு... எல்லாக் கோட்டையும் அழித்து, மீண்டும் முதலிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். இதெல்லாம் முடிந்து, ஒரு வழியாக, வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரிக்கு தொடர்பு சென்றால், அந்த நிறுவனத்தின், 'ரிங் டோன்' நம்மை மேலும் வெறுப்பேற்றும்.இவ்வளவு இம்சையையும் தாங்கி, பொறுமையாக இருந்தால் தான், அந்த சேவை மைய அதிகாரி, நம்மிடம் பேசுவார். நம் கோரிக்கையை கேட்டு, 'இதை நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது; நீங்கள் அருகில் உள்ள, எங்கள் நிறுவனத்திற்கு செல்லுங்கள்' என்பார்.அப்போது வரும் பாருங்கள், ஒரு கோபம்... கையில் இருக்கும் மொபைல் போனை உடைத்து விடுவோமா எனத் தோன்றும்.முதியோர், நோய் பாதிப்பில் உள்ளோர் நிலை கருதி, வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்வதை எளிதாக்க வேண்டும். நேரடியாக அதிகாரியிடம் பேசும் வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும்.வாடிக்கையாளரின் மன திருப்தி தான், நிறுவனத்தின் வளர்ச்சி என்பதை, சம்பந்தப்பட்டோர் உணர வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE