பெங்களூரு : “கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, மனிதனை விண்வெளிக்கு அனுப்பும், 'ககன்யான்' திட்டம், மேலும் ஒரு ஆண்டுக்கு ஒத்திவைக்கப்படுகிறது,” என, 'இஸ்ரோ' தலைவர் சிவன் நேற்று அறிவித்தார்.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை, அடுத்த ஆண்டு இறுதியில் செயல்படுத்த, இஸ்ரோ எனப்படும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் திட்டமிட்டிருந்தது.
ராக்கெட்
இந்த திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய விண்வெளி வீரர்களுக்கு, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில், பிரத்யேக பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த பயிற்சிகள், சில வாரங்களில் மீண்டும் துவங்கின. இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, ககன்யான் திட்டத்தை, மேலும் ஒரு ஆண்டுக்கு ஒத்திவைக்க, இஸ்ரோ முடிவு செய்து உள்ளது.
இதுகுறித்து, இஸ்ரோ தலைவர் சிவன், நேற்று கூறியதாவது: ககன்யான் திட்டத்தின்கீழ், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கு முன், அதற்கு ஒத்திகையாக, மனிதர்கள் இன்றி, இரண்டு ராக்கெட்டுகள் விண்ணில் செலுத்தப்படும். அதன்படி, இந்த மாதமும், அடுத்த ஆண்டு ஜூலையிலும், இரண்டு ராக்கெட்டுகளை செலுத்த திட்டமிட்டிருந்தோம்.
2023ம் ஆண்டு
இறுதியாக, அடுத்த ஆண்டு டிசம்பரில், விண்வெளி வீரர்களுடன், இந்தியாவின் முதல் ராக்கெட்டை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது.இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக, ககன்யான் திட்டத்தை, மேலும் ஒரு ஆண்டுக்கு ஒத்திவைக்க முடிவு செய்துஉள்ளோம். முதல் இரண்டு ராக்கெட்டுகள், அடுத்த ஆண்டு இறுதியிலோ அல்லது, 2022ம் ஆண்டு துவக்கத்திலோ செலுத்தப்படும்.
நிலவை ஆய்வு செய்யும், 'சந்திரயான் - 3' திட்டத்தை செயல்படுத்தும் தேதிகள், இதுவரை இறுதி செய்யப்படவில்லை. எனினும், அந்த திட்டத்திற்கான பணிகள், முழுவீச்சில் நடந்து வருகின்றன. வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்வதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள, 'சுக்ரயான்' திட்டத்திற்கான பணிகளும் நடந்து வருகின்றன. அந்த திட்டத்தை வரையறுக்கும் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்த திட்டம், 2023ம் ஆண்டு செயல்படுத்தப்படலாம். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE