எலுரு : ஆந்திராவின் எலுரு பகுதியில் பரவி வரும் மர்ம நோயால், மூன்று நாட்களில், 345 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் இறந்ததைஅடுத்து, பொது மக்களிடம் பீதி நிலவுகிறது. மத்திய சுகாதாரத்துறை குழுவினர், நோய் பாதிப்பு பகுதிகளில் இன்று ஆய்வு நடத்தவுள்ளனர்.
நம் அண்டை நாடான சீனாவில் பரவத் துவங்கிய கொரோனா தொற்று, இப்போது உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்து வருகிறது.நம் நாட்டில், கொரோனாவுக்கு, 90 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு மாதமாக, கொரோனா தொறறு குறைந்து வருவதால், மக்களிடம் நிம்மதி ஏற்பட்டுள்ளது.
வலிப்பு
இந்நிலையில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடக்கும் ஆந்திராவில், கடந்த மூன்று நாட்களாக மர்ம நோய் பரவத் துவங்கியுள்ளது.
மேற்கு கோதாவரி மாவட்டம் எலுரு நகரில் வசிக்கும் மக்களில் பலருக்கு, 5ம் தேதி, திடீரென வலிப்பு ஏற்பட்டது. வாயில் நுரை தள்ளிய நிலையில், பலரும் மயங்கி விழுந்தனர். மூன்று நாட்களில் இந்த நோயால், 345 பேர் பேர் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில், 180 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஒருவர் பலியாகி விட்டார் மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களில், 312 பேர், எலுரையும், 30 பேர், எலுரு புறநகர் பகுதிகளையும், மூன்று பேர், டெண்டுலுரு பகுதியையும் சேர்ந்தவர்கள். இந்த மர்ம நோயால், பொது மக்களிடம் பீதி ஏற்பட்டுள்ளது.நோய்க்கான காரணம்இன்னும் சரியாக கண்டறியப்படவில்லை, மர்ம நோய் பற்றி, மாவட்ட கலெக்டர் ரேவா முத்தயாலா ராஜூ கூறியதாவது:இந்த நோய் இதுவரை, ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவவில்லை. அதனால், இது தொற்று நோய் இல்லை.இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மூன்று முதல், ஐந்து நிமிடம் வரை வலிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்பின் வலிப்பு வரவில்லை. மறதி ஏற்படவில்லை. வாந்தி எடுக்கவில்லை. தலைவலி, முதுகு வலி உட்பட எந்த வலியும் ஏற்படவில்லை,.தண்ணீர் காரணமாக இந்த நோய் பரவியுள்ளதாக, சிலர் கூறுகின்றனர். ஆனால், எலுரு மாநகராட்சி வாயிலாக குடிநீர் வழங்கப்படும் மற்ற பகுதிகளில், இந்த நோயால் யாரும் பாதிக்கப்படவில்லை.
எலுரு நகரில், வீட்டுக்கு ஒருவர் அல்லது இருவர், மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் குடிப்பவர்கள். கொசுக்களை ஒழிக்க அடிக்கப்பட்ட புகையால், இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர். ஆனால், எதுவும் உறுதி செய்யப்படவில்லை.
சிறப்பு குழு
பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட ரத்தம், சிறுநீர், பரிசோதனைக்கு அனுப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்த பின் தான், நோய்க்கான காரணம் தெரியும்.நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க, எலுரு அரசு மருத்துவமனையில் அனைதது ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 56 டாக்டர்கள், 136 நர்சுகள், 24 மணி நேர பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.மர்ம நோயால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், முகாம்கள் அமைக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களை மருத்துவனையில் சேர்க்கவும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு ,அவர் கூறினார்.இதற்கிடையில், மர்ம நோயின் நிலை பற்றி ஆய்வு செய்ய, மத்திய சுகாதார அமைச்சகம், சிறப்பு குழுவை நியமித்துள்ளது. மூன்று டாக்டர்கள் அடங்கிய இந்த குழுவினர், எலுருக்கு இன்று வந்து, நோய் குறித்து ஆய்வு நடத்த உள்ளனர்.
முதல்வர் ஆய்வு
மர்ம நோய் பரவும் எலுருக்கு, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, நேற்று காலை வந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்த அவர், டாக்டர்களிடம் நோய் பற்றி கேட்டறிந்தார்.நோயிலிருந்து குணமடைந்தவர்களையும், முதல்வர் சந்தித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE