மதுரை : 'சமூகத்தில் அனைத்தும் ஊழல் மயமாகிவிட்டது. மக்களும் ஊழல்வாதிகளாக மாறி, ஓட்டுக்கு பணம் கேட்கின்றனர்' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிருப்தி வெளியிட்டது.
உயர்நீதிமன்றக் கிளை வழக்கறிஞர் ரத்தினம் தாக்கல் செய்த மனு:
தமிழக அமைச்சர் துரைக்கண்ணு அக்.,31 ல் இறந்தார். இதைத் தொடர்ந்து கும்பகோணம், பாபநாசம் பகுதியில் துரைக்கண்ணுவின் ஆதரவாளர்கள் சிலரது வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர். 267 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர். 2021 சட்டசபை தேர்தலில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய, அ.தி.மு.க.,வினர், 800 கோடி பதுக்கி வைத்திருந்து ள்ளனர். இதில், 40 சதவீத பணமே மீட்கப்பட்டுள்ளது. இதை விசாரிக்க சிறப்பு விசாரணைக்கு குழு அமைக்க வேண்டும்.
ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க எத்தகைய வழிகாட்டுதல்கள் உள்ளன என்பதற்கு மத்திய, மாநில அரசுகள், தேர்தல் கமிஷன் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். கும்பகோணம் பகுதியில் ரவுடியிசம், சொத்து அபகரிப்பு, சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாக புகார் அளிப்பவர்களுக்கு சட்டப்பணிகள் ஆணைக்குழு உதவி செய்ய வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு: முன்மாதிரியாக இருக்க வேண்டிய அரசியல்வாதிகள் மாறிவிட்டனர். ஒவ்வொரு தொகுதியிலும் கோடிக்கணக்கில் வேட்பாளர்கள் செலவிடுகின்றனர். சமூகத்தில் அனைத்தும் ஊழல் மயமாகிவிட்டது. மக்களும் ஊழல் வாதிகளாக மாறி, குடும்பத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வாக்காளர்கள் உள்ளனர் என பேரம் பேசி ஓட்டுக்கு பணம் கேட்கின்றனர். கடந்த லோக்சபா தேர்தலின்போது வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் வைத்திருந்த தகவல் அடிப்படையில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது என அதிருப்தி வெளியிட்டு, உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE