புதுடில்லி : மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து, நாடு முழுதும் விவசாயிகள் இன்று(டிச.,8), அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 'பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல், காலை, 11:00 - மாலை, 3:00 மணி வரை இந்தப் போராட்டம் நடத்தப்படும்' என, விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன. 'பஸ், ரயில்கள் வழக்கம் போல் இயங்கும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பந்த் க்கு ஆதரவு இல்லை. டில்லி, மும்பை,சென்னை, கோல்கட்டா, பெங்களூ உள்ளிட்ட முக்கிய நகரங்கள் வழக்கம் போல் செயல்பட்டன. எவ்வித பாதிப்பும் இல்லை.
மத்திய அரசு அமல்படுத்தியுள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டில்லி எல்லையில், தொடர்ந்து, 12வது நாளாக, நேற்றும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், 35 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன், மத்திய அரசு, ஐந்து சுற்று பேச்சு நடத்தியுள்ளது. மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையிலான, மூன்று அமைச்சர்கள் குழு, நாளை ஆறாவது சுற்று பேச்சு நடத்த உள்ளது.
இந்நிலையில், விவசாய சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு, விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்தன. இந்த போராட்டத்துக்கு, காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், தேசியவாத காங்., கம்யூனிஸ்ட் கட்சிகள், தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன; பல்வேறு தொழிற்சங்கங்கள், வர்த்தக அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
'பாரத் பந்த்'தையொட்டி, டில்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அண்டை மாநிலங்களை இணைக்கும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளன. அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க, பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை, டில்லி போலீஸ் செய்துள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, பாரதிய கிசான் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திக்கத் கூறியுள்ளதாவது: எங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள அனைவருக்கும் நன்றி. மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்த அடையாள போராட்டத்தை நடத்துகிறோம்.
அதே நேரத்தில், யாருக்கும் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். அதனால், அலுவலகம் செல்வோர் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில், காலை, 11:00 - மாலை, 3:00 மணி வரை, இந்தப் போராட்டத்தை அமைதியாக நடத்துவோம்.எங்கள் போராட்டத்துக்கு, அனைத்து தரப்பினரும் ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
'இந்தப் போராட்டத்தால், இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாது. பஸ், ரயில்கள் வழக்கம் போல் இயங்கும்; கடைகள், வணிக வளாகங்கள், அலுவலகங்களும் செயல்படும்' என, தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
மாநிலங்களுக்கு அறிவுரை
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம், சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:பாரத் பந்த் நடப்பதால், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். கொரோனா தடுப்பு விதிமுறைகளான, முக கவசம் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அமைதிக்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
கடைகள், போக்குவரத்து இயங்கும்
இந்தப் போராட்டம் குறித்து, சி.ஏ.ஐ.டி., எனப்படும் அனைத்திந்திய வணிகர் கூட்டமைப்பு மற்றும் அனைத்திந்திய போக்குவரத்து நல சங்கம் ஆகியவை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:விவசாயிகளின் போராட்டத்துக்கு முழுமையான ஆதரவு தருகிறோம். அதே நேரத்தில், போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம். கடைகள், வணிக வளாகங்கள், பொது போக்குவரத்து உட்பட அனைத்து போக்குவரத்தும் வழக்கம்போல் இயங்கும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, போக்குவரத்து தொழிற்சங்கமான, அனைத்திந்திய மோட்டார் வாகன காங்கிரஸ் வெளியிட்டுள்ள செய்தியில், 'போராட்டத்தில், எங்கள் சங்கத்தினர் பங்கேற்பர். அதனால், லாரி, டிரக் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படாது' என, குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று பஸ்கள் ஓடும்!
வேளாண் சட்டங்களை, திரும்ப பெற வலியுறுத்தி, இன்று நாடு தழுவிய, பொது வேலை நிறுத்ததம் நடத்தப்படும் நிலையில், தமிழகத்தில் வழக்கம் போல, பஸ்கள், ரயில்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு, புதிதாக கொண்டு வந்த, மூன்று வேளாண் சட்டங்களை, திரும்பப் பெற வலியுறுத்தி, பஞ்சாப் மாநில விவசாயிகள், டில்லியை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தி வருகின்றன.
மத்திய அரசு நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்படாததால், விவசாய அமைப்புகள், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, இன்று நாடு தழுவிய முழு வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இதற்கு, காங்கிரஸ், தி.மு.க., - கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இப்போராட்டத்தால், தமிழகத்தில் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க, அரசு ஊழியர்கள் அனைவரும், இன்று பணிக்கு வர வேண்டும் என, தலைமை செயலர் சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளார். பஸ்கள் அனைத்தும், இன்று வழக்கம் போல் இயக்கப்படும் என, போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விடுப்பில் இருக்கும் போக்குவரத்து தொழிலாளர்களையும், இன்று பணிக்கு வர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ரயில்களும் வழக்கம் போல இயங்கும் என, ரயில்வே நிர்வகம் அறிவித்துள்ளது.எதிர்கட்சிகள் சார்ந்த தொழிற்சங்கங்கள், ஆட்டோக்கள் ஓடாது என்று அறிவித்துள்ளன. எனவே, ஆட்டோக்கள் அதிகம் இயங்காது என, எதிர்பார்க்கப்படுகிறது. 'பந்த்' காரணமாக, எதிர்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளன. இதனால், முக்கிய பகுதிகளில், போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
நீடிக்கும் குழப்பம்
இந்தப் போராட்டம் குறித்து, சி.ஏ.ஐ.டி., எனப்படும் அனைத்திந்திய வணிகர் கூட்டமைப்பு மற்றும் அனைத்திந்திய போக்குவரத்து நல சங்கம் ஆகியவை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: விவசாயிகளின் போராட்டத்துக்கு முழுமையான ஆதரவு தருகிறோம். அதே நேரத்தில், போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம். கடைகள், வணிக வளாகங்கள், பொது போக்குவரத்து உட்பட அனைத்து போக்குவரத்தும் வழக்கம்போல் இயங்கும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, போக்குவரத்து தொழிற்சங்கமான, அனைத்திந்திய மோட்டார் வாகன காங்கிரஸ் வெளியிட்டுள்ள செய்தியில், 'போராட்டத்தில், எங்கள் சங்கத்தினர் பங்கேற்பர். அதனால், லாரி, டிரக் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படாது' என, குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE