'சேல்ஸ்மேன்' வேலைக்கு மூனு லட்சம்... எங்கு பார்த்தாலும், எக்கச்சக்க லஞ்சம்!

Updated : டிச 08, 2020 | Added : டிச 07, 2020
Advertisement
சித்ராவின் வீட்டுக்கு மித்ரா வரவே, ''அடடே... வா, மித்து,'' வரவேற்ற சித்ரா, மழைக்கு இதமாக பில்டர் காபி கொடுத்தாள்.''காபி சூப்பர்க்கா. அக்கா... எங்கோ போேகாணும்னு சொன்னீங்களே,'' மித்ரா சொன்னதும், ''யெஸ், ரேஷன் கடைக்குத்தான், வா... போலாம்,'' என்றாள் சித்ரா. இருவரும் கிளம்பினர்.''ரேஷன் கடை ஊழியர் அப்பாயின்மென்ட் விவகாரத்துல பண மழை கொட்டுதாம்,'' ஆரம்பித்தாள்
 'சேல்ஸ்மேன்' வேலைக்கு மூனு லட்சம்... எங்கு பார்த்தாலும்,  எக்கச்சக்க லஞ்சம்!

சித்ராவின் வீட்டுக்கு மித்ரா வரவே, ''அடடே... வா, மித்து,'' வரவேற்ற சித்ரா, மழைக்கு இதமாக பில்டர் காபி கொடுத்தாள்.''காபி சூப்பர்க்கா. அக்கா... எங்கோ போேகாணும்னு சொன்னீங்களே,'' மித்ரா சொன்னதும், ''யெஸ், ரேஷன் கடைக்குத்தான், வா... போலாம்,'' என்றாள் சித்ரா.

இருவரும் கிளம்பினர்.''ரேஷன் கடை ஊழியர் அப்பாயின்மென்ட் விவகாரத்துல பண மழை கொட்டுதாம்,'' ஆரம்பித்தாள் மித்ரா.

''ஆமாண்டி. ரேஷன் கடை விற்பனையாளர் போஸ்ட்டுக்கு, ஒரு லட்சம்னு 'பிக்ஸ்' பண்ணிட்டாங்க. ஆனா, திடீர்னு, மூணு லட்சம்னு ஏத்திட்டாங்களாம். அதுவும், மதுரைக்கு போய், 'வி.ஐ.பி.,'யை 'கவனிச்சு', அப்பாயின்மென்ட் ஆர்டர் வாங்கிட்டு வந்துடறாங்க'' என்றாள் சித்ரா.

''அப்படின்னா, எழுத்து தேர்வு, நேர்காணல் எல்லாம் நடத்தறாங்களே... ''

''அதெல்லாம், சும்மா ஒரு 'ஐ வாஷ்'தான், மித்து. இதே மாதிரிதான், இதுக்கு முன்னாடி, கூட்டுறவு உதவியாளர் வேலைக்கு தேர்வு வச்சாங்க. ஆனா, அந்த வேலை, ஏழு லட்சம் ரூபாய் வரைக்கும் விலை போயிருக்கு. 'டிப்ளமோ' முடிச்சவங்கதான், அந்த வேலைக்கு போக முடியும்; பணம் வாங்கிட்டதால, 'டிப்ளமோ' படிக்கிறவங்களும் விண்ணப்பிக்கலாம்னு சொல்லி, 'ஓகே' பண்ணிட்டாங்க,'' என்றாள் சித்ரா.

''பணம் பத்தும் செய்யும்னு, சும்மாவா சொல்லியிருக்காங்க,'' என்ற மித்ரா, ''இங்க இப்டின்னா, லஞ்ச ஒழிப்பு போலீஸ்காரங்க மேலயே கேஸ் போட்டிருக்காங்க…' என்றாள்.

''அட…அப்படியா. விவரமா சொல்லுடி?''

''மாவட்ட கருவூல துறைல இருக்க பெரிய ஆபீசர் டிரான்ஸ்பர், கையூட்டுன்னு, கிட்டத்தட்ட பல லட்சம் ரூபாய் சொத்து சேர்த்திட்டாருன்னு, காந்தி பேர வச்ச இயக்கத்தில ஒருத்தரு, லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு புகார் செஞ்சிருக்காரு. ஆனா, எந்த ஆக்ஷனும் எடுக்காததால, அவங்க மேலயே, ஐகோர்ட்ல கேஸ் போட்டுட்டாரு,''

''ஏங்க… இங்கே ரகோத்தமன்னு யாராவது இருக்கீங்களா? 'ஸ்மார்ட் கார்டு' விட்டுட்டு போய்ட்டாங்க போல,'' விற்பனையாளர் குரல் கொடுத்தார்.

''ஓ…அப்படியா…அப்புறம் என்னாச்சு?''

''லஞ்ச ஒழிப்பு போலீஸ் மேலயே கேஸ் போடறாங்கன்னா சும்மாவா. விவகாரத்த கிளறியிருக்காங்க போலீஸ்காரங்க. ஏற்கனவே, வடக்கு வட்டத்தில இருந்த லேடி ஆபீசர் மேல ஏகப்பட்ட ஊழல் புகார் வந்ததால, அவங்களை, டிரான்ஸ்பர் செஞ்சிட்டாங்க,''

''அந்த கோபத்துல தான், சிலரை துாண்டிவிட்டு, இப்படி பண்றாங்கன்னு, பெரிய ஆபீசர் தரப்பு சொல்லியிருக்காங்க. இருந்தாலும், இந்த விவகாரத்த இன்னும் ஆழமா, போலீசார் கிளற ஆரம்பிச்சுட்டாங்க,'' என்றாள் மித்ரா.

''வா… கீதா. நல்லாயிருக்கியா?'' என, தனக்கு பின் நின்று கொண்டிருந்த பக்கத்து வீட்டு பெண்ணிடம் நலம் விசாரித்தாள் சித்ரா.

ஒரு வழியாக பொருட்கள் வாங்கியபடி, இருவரும் கிளம்ப முற்பட்டனர். இடைமறித்த ரேஷன் கடைக்காரர், ''அக்கா, தீபாவளிக்கு நீங்க கொடுத்த ஸ்வீட் நல்லா இருந்துச்சு'' என சொல்ல, இருவரும் சிரித்தபடி மார்க்கெட் நோக்கி சென்றனர்.

''அக்கா, சவுத் போலீஸ் ஸ்டேஷன் சின்ன ஆபீசர், மாசாமாசம் ஸ்வீட், மளிகை, டிபார்ட்மென்ட் இப்படி பல கடைகளில், 'இனாமா'வே பொருள் வாங்கிட்டு போயிடறாராம். தீபாவளி முடிஞ்சு, ரொம்ப நாளாகியும், பெருமாள் கோவில் வீதிக்கு பக்கத்தில இருக்கிற ஒரு நார்த் இண்டியன் ஸ்வீட் கடையில, அதிகாரம் பண்ணி, ஸ்வீட், பணமுன்னு 'பல்க்'கா, வாங்கிட்டு போனாராம். வெளியில பாக்கறதுக்கு, தன்னை ஒரு 'ஸ்ட்ரிக்ட் ஆபீசர்' மாதிரி காட்டும் அவர், இப்படி செய்றாராம்,''

''அப்படின்னா, அவருக்கு மாசாமாசம் தீபாவளின்னு சொல்லுடி,'' என்ற சித்ரா, ''அருகில் ஒரு பெட்டிக்கடையில் வண்டியை நிறுத்தி, ''அண்ணா, 'ராஜேஷ்குமார்' எழுதிய, 'அவனா... நான்' கிரைம் நாவல் ஒண்ணு கொடுங்க,'' என்றாள்.

பணத்தை கொடுத்து விட்டு, புத்தகத்தை பேக்கில் வைத்த சித்ரா, போலீசாரின் வாகன சோதனையில், அனைத்து ஆவணங்களையும் காட்டி விட்டு, வண்டியை ஸ்டார்ட் செய்தாள்.

''மங்கலம் பகுதியில ஒரு குட்டி ஆபீசர், நைட் ரவுண்ட்ஸ் போவாராம். அவர் கூட எப்.ஓ.பி., பசங்களும் கூடப்போய், வெகிக்கிள் செக்கிங் என்ற பேர்ல, கலெக்ஷன் அள்ளு அள்ளுன்னு அள்றாராம். யாராவது பெரிய ஆபீசர்ங்க வரும்போது, எப்.ஓ.பி., பசங்களையே வாகன ஓட்டிகள் மாதிரி 'செட் அப்' பண்ணி, நல்ல பேரு வாங்கிடுவாராம்,'' என்றாள் மித்ரா.

''அவரு, 'செல்வம்' சேர்க்கறதுல ஜாக்கிரதையான ஆசாமி போல,'' சித்ரா சொல்லி கொண்டிருக்கும் போதே, கலெக்டர் ஆபீஸ் முன்னாடி, காங்கிரஸ் கட்சியினர், போராட்டம் நடத்தி கொண்டிருந்ததால், 'டிராபிக் ஜாம்' ஏற்பட்டது.வண்டியை மெதுவாக ஓட்டிய அவள், ''மித்ரா, போன வாரம் இதே போல, ஒரு போராட்டத்துல நடந்த கூத்து தெரியுமா?'' என்றாள்.

''சொல்லுங்க்கா...''''போராட்டத்தில மாநகர காங்., தலைவர் கிருஷ்ணன் பேசி முடிச்சதும், அவர்கிட்ட பொதுமக்கள் சிலர் மனு கொடுத்து, பிரச்னையை தீர்த்து கொடுங்கன்னு சொல்லியிருக்காங்க. 'இது என்னடா வம்பா போச்சு... நாம என்ன, எம்.பி.,யா, எம்.எல்.ஏ.,வா, நம்மகிட்ட மனு தர்றாங்களேன்னு, குழம்பிட்டாரு,''

''அதைப்பார்த்துட்டு, பக்கத்துல இருந்த ஒரு நிர்வாகி, 'ஐயா, நீங்க பாக்கறதுக்கு, எம்.பி., சுப்பராயன் மாதிரியே இருக்கறதால, அவருன்னு நினைச்சு மனு கொடுத்திட்டாங்க,' என்றதும், ''ஓ... அதுதான் விஷயமா?'ன்னு நிம்மதி பெருமூச்சு விட்டாராம்,'' சொல்லி சிரித்தாள் சித்ரா.

அப்போது, தென்பட்ட மொபைல் போன் கடையில் கூட்டம் அதிகமாக இருந்தது. அதை பார்த்த மித்ரா, ''எப்ப ஸ்கூல் திறப்பாங்கன்னு தெரியல. ஆன்லைன் கிளாஸில் ரொம்பவே சிரமப்படறாங்க,'' என கல்வித்துறை குறித்து பேசினாள் மித்ரா.

''நானும் கேள்விப்பட்டேன். நம்ம கல்வி அதிகாரிங்க கல்லா கட்றதுல கவனமா இருக்காங்க மித்து. சமீபத்துல பல்லடம் பக்கத்தில இருக்கிற ஒரு பிரைவேட் ஸ்கூலுக்கு லைசென்ஸ் சம்பந்தமா விசிட் போன கல்வி அதிகாரி, வேலை முடிஞ்சும் கிளம்பாம நெளிஞ்சாராம்,''

''அவரோடு 'எதிர்பார்ப்ப' புரிஞ்சுகிட்ட ஸ்கூல் நிர்வாகம், 'சார், கொரோனா டைம், கலெக்ஷனே சுத்தமா இல்லைன்னு' சொன்னதும், பரவாயில்ல, இருக்கிறத குடுங்கன்னு சொல்லி, ஒரு தொகையை வாங்கிட்டு போனாராம்,''

''அதான், தெரிஞ்சதாச்சே...'' என்ற மித்ராவின் மொபைல் போன் சிணுங்க, ''யாரு நாகராஜ் அங்கிளா, வீட்டுகிட்ட வெயிட் பண்ணுங்க, வந்துகிட்டு இருக்கேன்,'' என கூறி, இணைப்பை துண்டித்தாள்.

வழியில் போதை ஆசாமி ஒருவர் தள்ளாடி சென்றதை பார்த்த, சித்ரா, ''பணம் மாத்திரம் கெடச்சா போதும். யார் எக்கேடு கெட்டா நமக்கென்னன்னுதான், போலீஸ்காரங்க நெனைக்கறாங்க,'' என்றாள் சித்ரா.

''அக்கா... எந்த ஊரு போலீஸ்?''

''பல்லடம் பக்கத்தில இருக்க, '....நாயக்கன்பாளையம்' ஸ்டேஷன் லிமிட்லதான். அங்க, 24 மணி நேரமும் 'பாரில்' சரக்கு விற்பனை கொடி கட்டி பறக்குது. மாதம் ஒன்னாம் தேதி, அரசாங்க சம்பளம் வருதோ இல்லையோ, 'பார்ல' இருந்து தவறாம மாமூல் கரெக்டா போகுதாம்,''

''ரெண்டு நாளைக்கு முன்னாடி, அதிக ரேட்டுக்கு சரக்கு வித்ததால, ஒரு கடையில, அடிதடி பிரச்னை வந்துருக்கு; ஆனாலும், போலீஸ் நமக்கென்னு போச்சுன்னு விட்டுட்டாங்களாம்,''

''அங்க மட்டுமில்லீங்க்கா, டிஸ்ட்ரிக்ட் பூரா இப்படித்தான் போயிட்டிருக்கு. போலீஸ்காரங்க இப்டி நடந்துக்கறாங்கன்னா, தாராபுரம் பக்கத்தில, பொன்னாபுரத்தில், செம்மண் ஏத்தி வந்த, அஞ்சு லாரியை ரெவின்யூ ஆபீசர்ஸ் புடிச்சாங்க. உடனே, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சின்னு, கட்சி பேதமில்லா, 'பிரஸ்ஸர்' கொடுத்து, ஒரு ஆ.ஐ.,யை, டிரான்ஸ்பர் பண்ணிட்டாங்க...''

''அடக்கொடுமையே, நல்லதே செய்யக்கூடாதா... அப்புறம்?''''இதுபத்தி விசாரிச்ச, டி.ஆர்.ஓ., சம்பந்தப்பட்ட ஆர்.ஐ.,யை அதேயிடத்தில வேல பார்க்க சொல்லிட்டாராம்,'' என, மித்ரா சொல்லி கொண்டிருக்கும்போதே, மார்க்கெட் வாசலில் வண்டியை நிறுத்தினாள் சித்ரா. இருவரும், காய்கறி வாங்க உள்ளே சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X