மதுரை : 'போலீசாரின் குறைகளுக்கு தீர்வு காண, நீதிபதி தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டதா, 10 ஆண்டுகளில், எத்தனை போலீசார் தற்கொலை செய்துள்ளனர்' என, தமிழக அரசு பதிலளிக்க, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
கரூர் மாசிலாமணி தாக்கல் செய்த பொதுநல மனு:போலீசாக பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். தமிழகத்தில், 1,000 பேருக்கு இரு போலீசார் உள்ளனர்.குறைந்த சம்பளம்மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு வார விடுமுறை அளிக்கப்படுகிறது. போலீசார், 24 மணி நேரம் பணிபுரிகின்றனர். ம.பி., - உ.பி., மேற்கு வங்கம், மஹாராஷ்டிராவைவிட, தமிழகத்தில் போலீசாருக்கு சம்பளம் குறைவு. துவக்கப் பள்ளி ஆசிரியர்களைவிட, குறைந்த சம்பளம் வழங்கப்படுகிறது.போலீசாருக்கு சம்பள உயர்வு அளிக்க வேண்டும். போலீஸ், எஸ்.ஐ., காலிப் பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மாசிலாமணி குறிப்பிட்டார்.
நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு உத்தரவு:கேரளாவை விட, தமிழகத்தில் அதிக போராட்டங்கள் நடக்கின்றன. குடும்பத்தினருடன் போலீசார், நேரம் செலவிட முடியவில்லை.தொடர் பணியால் உடல், மன ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். ஒரு மணி நேரம் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த, போலீசார் தவறினால், நிலைமை என்ன ஆவது?ஒரு மணி நேரம்போலீசார் இல்லாமல், ஒரு மணி நேரம் கூட நம்மால் இருக்க முடியாது. ஒரு காலத்தில், இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையாக, போலீசாருக்கு சம்பளம் வழங்கப்பட்டது.
தற்போது, குறைந்த சம்பளம் வழங்கப்படுகிறது.போலீசாரின் குறைகளுக்கு தீர்வு காண, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் கமிஷன் அமைக்க, உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது. அதன்படி அமைக்கப்பட்டதா, இல்லையெனில் எப்போது அமைக்கப்படும்?எத்தகைய பிரச்னையை போலீசார் சந்திக்கின்றனர், போலீசார் குறைகளை தெரிவிக்க, எதுவும் வழிவகை செய்யப்பட்டுள்ளதா, அவர்களுக்கு கால முறையில் பதவி உயர்வு வழங்கப்படுகிறதா, விழாக்கள், குழந்தைகளின் பிறந்த நாளில் பங்கேற்க, விடுமுறை அளிக்கப்படுகிறதா?எத்தனை காலிப் பணியிடங்கள் உள்ளன, தமிழகத்தில், மக்கள் தொகை விகிதாச்சாரத்திற்கு ஏற்ப போலீசாரின் எண்ணிக்கை உள்ளதா, காவல் துறையை பலப்படுத்த எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிறப்பு இன்சூரன்ஸ்காலிப் பணியிடங்களை நிரப்ப, மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்ன, பிற மாநில போலீசாரிடம் ஒப்பிடுகையில், தமிழக போலீசாருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு, போலீசாருக்கு சிறப்பு இன்சூரன்ஸ் திட்டம் செயல்படுத்தப்படுகிறதா?கடந்த, 10 ஆண்டுகளில் எத்தனை போலீசார் தற்கொலை செய்துள்ளனர், எத்தனை போலீசார் மீது கிரிமினல் வழக்குகள், துறை ரீதியான நடவடிக்கை நிலுவையில் உள்ளன என்பதற்கு, தமிழக தலைமைச் செயலர், உள்துறை செயலர், டி.ஜி.பி., பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும். விசாரணை டிச., 17க்கு ஒத்தி வைக்கப்படுகிறது.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE