சென்னை : மின்சாரம் சப்ளை செய்த நிறுவனங்களுக்கு வழங்குவதற்காக, ஒப்புதல் அளித்துள்ள, 30 ஆயிரம் கோடி ரூபாய் கடனை, உடனே விடுவிக்குமாறு, மத்திய அரசின் நிதி நிறுவனங்களை, தமிழக மின் வாரியம் வலியுறுத்தி உள்ளது.
தமிழக மின் வாரியம், மின் தேவையை பூர்த்தி செய்வதற்காக, மத்திய அரசுக்கு சொந்தமான மற்றும் தனியார் மின் நிலையங்களில் இருந்து, மின்சாரம் கொள்முதல் செய்கிறது. கடும் நிதி நெருக்கடியில் இருப்பதால், மின் வாரியம், மின் சப்ளை நிறுவனங்களுக்கு, குறித்த காலத்தில், பணம் வழங்குவதில்லை. கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க, மார்ச் இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இதனால், தொழிற்சாலைகள் உள்ளிட்டவை செயல்படாததால், மின்சாரம் விற்பனை பாதித்ததால், பல மாநிலங்களின் மின் வாரியங்களுக்கு நிதிச்சுமை அதிகரித்தது.
இதையடுத்து, நிதி நெருக்கடியில் உள்ள மின் வாரியங்களுக்கு, சிறப்பு கடன் உதவி திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.அத்திட்டத்தின் கீழ், மின்சாரம் வாங்கியதற்காக, ஜூன் மாதம் வரை, நிலுவையில் உள்ள பணத்தை வழங்க, 32 ஆயிரம் கோடி ரூபாய் கடன் கேட்டு, மத்திய அரசின், 'பவர் பைனான்ஸ், ரூரல் எலக்ட்ரிபிகேஷன்' நிதி நிறுவனங்களிடம், தமிழக மின் வாரியம் அறிக்கை சமர்ப்பித்தது.அதில், பவர் பைனான்ஸ், 12 ஆயிரத்து, 400 கோடி ரூபாயும்; ரூரல் எலக்ட்ரிபிகேஷன், 17 ஆயிரத்து, 830 கோடி ரூபாயும் கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளன.
அதற்கு, 9.5 சதவீதம் ஆண்டு வட்டி வசூலிக்கப்படும். ஒப்புதல் அளித்து, பல நாட்கள் ஆகியும், இதுவரை, கடன் தொகை விடுவிக்கப்படவில்லை. அதை, உடனே விடுவிக்குமாறு, மத்திய நிதி நிறுவனங்களை, மின் வாரியம் வலியுறுத்தியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE