சென்னை : ரேஷன் கடைகளில், மத்திய அரசின் சார்பில், கறுப்பு கொண்டை கடலை வழங்கப்படுவதற்கு, கார்டுதாரரிடம் வரவேற்பு கிடைத்துள்ளது.
கொரோனா ஊரடங்கால், ஏழை மக்கள் பாதித்ததால், ரேஷன் கடைகளில் ஜூலையில் இருந்து நவம்பர் வரை, முன்னுரிமை, அந்தியோதயா கார்டுதாரர்களுக்கு, 1 கிலோ கறுப்பு கொண்டை கடலை இலவசமாக வழங்க, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டது. மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு, கறுப்பு கொண்டை கடலை, அக்டோபரில் இருந்து, 'சப்ளை' செய்யப்பட்டது. இதனால், தமிழக அரசு, ஜூலை முதல் நவம்பர் வரை ஐந்து மாதங்களுக்கு சேர்த்து, ஒரே தவணையாக, இம்மாதம், 2ம் தேதி முதல், முன்னுரிமை, அந்தியோதயா கார்டுதாரருக்கு, தலா, 5 கிலோ கறுப்பு கொண்டை கடலை வழங்குகிறது. அவர்களுக்கு, துவரம் பருப்பு வழங்கப்படவில்லை.
அதேசமயம், அரிசி பிரிவில் உள்ள முன்னுரிமையற்ற கார்டுதாருக்கு, 1 கிலோ துவரம் பருப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. கறுப்பு கொண்டை கடலை வழங்குவதற்கு, கார்டுதாரரிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பலரும், தங்களுக்கு வழங்கப்படும், 5 கிலோ கடலையில், அவை கிடைக்காத, முன்னுரிமையற்ற அரிசி, சர்க்கரை கார்டுதாரருக்கு, 2 கிலோ வரை வழங்குகின்றனர்.இதுகுறித்து, கார்டுதாரர் கூறுகையில், 'கறுப்பு கடலையில், அதிக சத்துக்கள் உள்ளன. இருப்பிலும், பலர் அதை வீடுகளில் சமைப்பதில்லை. 'தற்போது, ரேஷனில் இலவசமாக வழங்கப்படும் கறுப்பு கடலை, மழை நேரத்தில் வேகவைத்து சாப்பிட, மிகவும் நன்றாக உள்ளது' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE