நாகர்கோவில் : ''ஆயுர்வேதத்தில் அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவது, இந்தியாவை கற்காலத்துக்கு அழைத்து செல்வதாகும்,'' என, அகில இந்திய மருத்துவர்கள் சங்க தலைவர் டாக்டர் ஜெயலால் கூறினார்.
நாகர்கோவிலில் அவர் கூறியதாவது:ஆயுஷ் டாக்டர்கள், அறுவை சிகிச்சை செய்ய வழிவகை செய்யும் உத்தரவை, மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இது, மருத்துவத் துறையில் கலப்படத்தை உருவாக்கும்.ஆயுர்வேதம், சித்தா மருத்துவம், யுனானி, ஹோமியோபதி டாக்டர்களுக்கு மருத்துவ மேற்படிப்பை அறிவித்தது, தவறான அணுகுமுறை. மத்திய அரசின் ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே சட்டம் போன்று ஒரே மருத்துவம் என்பது, ஆபத்தை ஏற்படுத்தும். நவீன மருத்துவத்தின் வளர்ச்சி, அதலபாதாளத்துக்கு செல்லும். மயக்க மருந்து இல்லாத ஆயுஷ் துறையில், எப்படி அறுவை சிகிச்சை நடத்த முடியும்.
வளர்ந்து வரும் மருத்துவத் துறையை அழிவு பாதைக்கு கொண்டு சென்று, மக்கள் உயிருடன் மத்திய அரசு விளையாடுகிறது.எனவே, இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும். இதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுக்களை கலைக்க வேண்டும். இதை வலியுறுத்தி, இன்று மதியம், 12:00 மணி முதல், 2:00 மணி வரை, 4 லட்சம் டாக்டர்கள், தர்ணாவில் ஈடுபடுகின்றனர்.மத்திய அரசு செவி சாய்க்கா விட்டால், டிச., 11- காலை, 6:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை, பொது வேலை நிறுத்தத்தில் டாக்டர்கள் ஈடுபடுவர். உயிர் காப்பு அவசர சிகிச்சை மட்டும் செய்யப்படும்.
வளர்ந்து வரும் விஞ்ஞானத்தை பாரம்பரியம் என்ற பெயரில், புறந்தள்ளுவது இந்தியாவை கற்காலத்துக்கு அழைத்து செல்வதாகும். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE