உங்களுக்கு எத்தனை வயது வேண்டுமானாலும் இருக்கலாம். இத்தனை நாட்களில் யார் யாருடனோ பழகி வந்திருக்கலாம். நட்பில் உறவில், அக்கம்பக்கத்தில் என நாம் பேசி மகிழ ஒரு கூட்டம் தனியாக இருக்கும். கால ஓட்டத்தில் ஒரு சிலரைத் தவிர பலரும் அந்த வட்டத்தில் மாறிக் கொண்டே வந்திருப்பர். சிலர் மாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் இன்னும் தங்களைக் குறுக்கிக் கொண்டு ஜீவிக்கப் பழகி இருப்பர். முகம் பார்த்து சிரித்துப் பழகிய உள்ளம் ஒன்று என்றோ சொல்லிய ஒரு சொல், செய்த ஒரு செயல் பெரும் இடியை நமக்குள் இறக்கி இருக்கலாம். அப்படியான நேரங்களில் அழுதோ, புலம்பியோ, மவுனமாகவோ, திட்டியோ, உள்ளே புழுங்கியோ வெந்து போய் இருப்போம். சமயங்களில் நம் மனம் வருந்தியது கூட தெரியாமல் அவர்களது உலகத்தில் மகிழ்ச்சியாக வலம் வந்து கொண்டு இருப்பார்கள். நமக்கோ அது இன்னமும் இம்சை அளிக்கும்.
மனித இயல்பு
இங்கே இன்னொரு விஷயத்தை யோசிக்கலாம். இது வரையான நாட்களில் நாம் யாரை காயப்படுத்தி இருக்கிறோம். நம் செயல் எவரின் மனதை புண் படுத்தி இருக்கிறது என நினைவுக்கு கொண்டு வரலாம். பெரும்பாலும் நமக்கு நம் மீது அதீத நம்பிக்கை. எந்த ஒரு தவறையும் செய்பவர் நான் இல்லை. என்னால் இது வரை யாரும் வருந்தியதும் இல்லை என சொல்வோம் நம்மில் பலரும். பிழை செய்தல் மனித இயல்பு. நாம் அறிந்தோ அறியாமலோ பிழைகளை செய்து கொண்டே தான் இருக்கிறோம். எந்த இடத்தில் நான் செய்தது தவறு என ஒத்துக் கொள்கிறோமோ அங்கே நம்மை உணரத் துவங்குகிறோம். அந்த தவறை சரி செய்யும் போது வளரத் துவங்குகிறோம். இதெல்லாம் இல்லாமல் வெறுமனே நான் தவறே செய்யாதவன்/செய்யாதவள் என்றெல்லாம் பேசிக் கொண்டே இருப்பவர்களுக்கு வயது என்பது வெறும் எண் மட்டுமே. அந்த வயதுக்குரிய பக்குவம் வரவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.வெடிக்கின்ற கோபம், எடுத்தெறிந்து பேசுகிற சொல் திட்டமிட்டு பெரும்பாலும் வெளிப்படுவதில்லை. அந்த நொடியில், நிமிடத்தில் நம்மையும் மீறி கொட்டிவிடுகிறோம். அதற்காக பின்னர் வருந்தினாலும் சொன்னதை மாற்ற முடியாது அல்லவா?
யோசித்துப் பேசுதல்
யாகாவராயினும் நாகாக்க என திருக்குறளை ஆரம்பப் பள்ளியிலே தெரிந்து கொண்டு விட்டோம். ஆனால், அதன் படி நடப்பது என்பது சவால் என்பதாலேயே வாய்க்கு வந்ததை உணர்ச்சி வேகத்தில் கொட்டித் தீர்த்து விடுகிறோம். மீண்டும் முகம் பார்க்க வேண்டும் என்ற நாகரிகமும் இல்லாமல் இப்படி செய்பவர்களே அதிகம். எனவே பேசுவதற்கு முன் இந்த வார்த்தைத் தேவை தானா? இந்த சூழலில் இதை சொல்ல வேண்டுமா? இதைச் சொல்வதால் மாற்றம் ஏற்படுமா என யோசித்தே வார்த்தைகள் விட வேண்டும்.நம் குடும்பம், உறவு, அக்கம்பக்கம், நட்பு வட்டம் தாண்டி சமூக வலைத்தள நட்பு என நம் வெளி உள்ளது.
தெரிந்த முகம், அறிந்த மனம் என இருந்தாலும் வெகு சிலரிடம் மட்டும் நாம் நெருக்கமானதைப் பகிர்ந்து கொள்வோம். அந்த அளவுக்கு அந்த உள்ளங்கள் தகுதியானவை என தேர்ந்தெடுத்துப் பகிர்ந்து இருப்போம். நாம் பகிர்ந்ததை சொல்வது என்பது வேறு, சொல்லாததை, சொன்னதாக தானாய் கற்பனை செய்து கொண்டதை எல்லாம் நம் பெயரில் சேர்த்து சம்பந்தப்பட்ட இடத்தில் சொல்லிய கதைகள் நமக்கும் நிகழ்ந்து இருக்கும். நம்மைக் காயப்படுத்திய மனங்கள் அத்தனையும் என்றோ ஒரு நாள் சேர்ந்து தேநீர் அருந்தியபடி சிரித்து மகிழ்ந்தவையாகவோ இருக்கின்றன. உணவையும் உணர்வுகளையும் பகிர்ந்து பழகிய பின் ஒருவருக்கு ஒருவர் நேர்மையாக இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. அதையும்மீறி, போகிற போக்கில் உளறிச் செல்லும் சில்லறைத்தனத்தை இன்னும் பாவம் அவர்கள் வளரவில்லை என எண்ணிக் கொண்டு தண்டிக்காமல் விட்டு விடலாம்.
காலத்தின் ஓட்டம்
எதுவுமே தெரியாத நாளையை வைத்துக் கொண்டு தெரிந்து பழகி மனத்தை வருத்தியவர்களை பழி தீர்த்து எந்த சாதனைப் புத்தகத்தில் இடம் பெறப் போகிறோம்? ஆகவே ஆகாது என்றால் ஓர் இருவருடன் முறைத்துக் கொள்வதன் மூலமே நிம்மதி கிடைக்கிறது என்றால் இருந்துவிட்டுப் போகலாம். ஆனால் சந்திக்கும் அத்தனை பேருடனும் இப்படியான சிக்கல் வருகிறது என்றால் நம்மை நாம் சரி செய்து கொள்ளத் தயாராய் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் நானும் தவறு செய்கிற மனித இனம் தான் என்ற உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும். வானத்தில் இருந்து குதித்தவர் போல நடந்து கொள்வது நம்மை அந்நியப்படுத்தி விடும். இதுவரையான கால கட்டத்தில் எந்த ஒரு தப்பும் செய்யாத ஒரே ஒரு மனிதரையாவது சந்தித்து இருக்கிறோமா என்ன? ஒரு வேளை ஓரிருவர் என நீங்கள் பெயரைச் சொன்னால், அவர்கள் மீது இருக்கும் பிரியம் உங்கள் கண்ணை மறைக்க தவறுகள் கண்ணில் தட்டப்படுவது இல்லை.
தேவை அன்பு
எல்லாருக்குமே தேவையாக இருக்கிறது அன்பு. நம் அன்றாடம் நம்மை அப்படித் தான் உணர வைக்கிறது. தேவை என சொல்லிக் கொண்டே இருக்கிறோமே ஒழிய அதே அன்பை கொடுப்பதற்கு நாம் தயாராய் இருக்கிறோமா என்ற கேள்வியை நம்மை நோக்கி கேட்டுக் கொள்ள வேண்டும். அதுவும் எந்த ஒரு பிரதிபலனும் எதிர்பாராமல் மாசற்ற அன்பை ஒரு குழந்தையைப் போல நம்மைச் சுற்றி உள்ள உள்ளங்களுக்கு வழங்கத் தயாராய் இருத்தல் என்பது நம் முகத்தில் தெய்வீகக் கலையை உருவாக்கும். நம் மனதை ஆலயமாக்கும். நம் சுற்றத்தில், நட்பில் அன்பை விதைப்போம்.மன்னித்தல் மறத்தல் என்பதை விடவும் அப்படி ஒன்று நடந்தது என்பதை பொருட்படுத்தாமல் இருந்துப் பார்த்தால் அது இன்னும் உன்னதம்.-தீபா நாகராணி,எழுத்தாளர் மதுரை. nraniji@gmail.com
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE