சென்னை : இயற்கை முறையில் காய்கறிகள் மற்றும் கீரைகளை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, மானியம் வழங்க தோட்டக்கலைத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
பல்வேறு மாவட்டங்களில், காய்கறிகள், கீரைவகைகள் சாகுபடி நடந்து வருகிறது. அதிக மகசூல் பெறுவதற்காகவும், பூச்சிகளை கட்டுப்படுத்தவும், ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.இந்த ரசாயனங்களின் தாக்கம், உற்பத்தியாகும் உணவு பொருட்களிலும் எதிரொலிக்கிறது. எனவே, இயற்கை முறையில் காய்கறிகள் மற்றும் கீரைகள் சாகுபடியை ஊக்குவிக்க, தோட்டக்கலைத்துறை முடிவெடுத்துள்ளது. மத்திய அரசின் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
அதன்படி, இயற்கை முறையில் காய்கறி சாகுபடிசெய்யும் விவசாயிக்கு, ஏக்கருக்கு 1,000 ரூபாய்; வெண்டை, கத்தரி, தக்காளி சாகுபடிக்கு, 1,500 ரூபாய் மானியமாக வழங்கப்பட உள்ளது.ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக, 5 ஏக்கர் வரை மானியம் வழங்க, தோட்டக்கலைத் துறை இயக்குனர் சுப்பையன் உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ஜெயபாண்டி கூறியதாவது:இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, விவசாயிகள் தனியாகவும், விவசாய குழுக்கள் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம்.
ஊக்கத்தொகை பெற, இயற்கை பண்ணையின் சான்றிதழ் நகலை, விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.இதன் வாயிலாக, சந்தைப்படுத்துவதற்கு அங்கீகாரம் பெற்று, அதிக லாபம் பெற முடியும். விண்ணப்பங்களை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில், சமர்பிக்க வேண்டும்.இதற்கு உழவன் செயலி மற்றும், www.tn.hortinet.com என்ற இணையதளத்தில், முன்பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE