சேலம் : சேலத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, நான்கு பேர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
சேலம், பொன்னம்மாபேட்டை, வால்காட்டைச் சேர்ந்தவர் முருகன், 38; சேலம் கோட்டையில் உள்ள, சலுான் கடையில், 15 ஆண்டுகளாக பணி செய்து வந்தார். மனைவி கோகிலா, 34. மதன்குமார், 19, வசந்தகுமார், 17, கார்த்தி, 12, என, மூன்று மகன்கள்.இதில், மதன்குமார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகளாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்காக, உறவினர்கள், நண்பர்கள் என, பலரிடமும் முருகன் கடன் வாங்கினார். இந்நிலையில், எட்டு மாதங்களுக்கு முன், மதன்குமார் இறந்தார். இதனால், குடும்பமே விரக்தியின் உச்சத்துக்கு சென்றது.
கந்து வட்டி கும்பல், முருகன் குடும்பத்துக்கு நெருக்கடி கொடுத்தது.இதனால், 10ம் வகுப்பு படித்து வந்த, வசந்தகுமாரை பள்ளியில் இருந்து நிறுத்தி, முடி திருத்தும் பயிற்சிக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் போதிய வருமானம் இல்லாததால், குடும்பத்தை நடத்த முடியவில்லை. நேற்று காலை பயிற்சிக்கு சென்ற வசந்தகுமாருக்கு, முருகன் போன் செய்து வீட்டுக்கு அழைத்து ள்ளார். பின், முருகன், மனைவி கோகிலா, மகன்கள் வசந்தகுமார், கார்த்தி ஆகிய நான்கு பேரும், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். கந்து வட்டி கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE