சென்னை : மோசடி புகாரில், தன்னிடம் உள்ள ஆதாரங்களை, போலீசிடம் அளிக்கும்படி, நடிகர் சூரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வீட்டுமனை எனக்கூறி, விவசாய நிலத்தை அதிக விலைக்கு விற்றதாகவும், தன்னை மோசடி செய்து விட்டதாகவும், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ரமேஷ் குடவாலா, சினிமா தயாரிப்பாளர் அன்புவேல் ராஜனுக்கு எதிராக, நடிகர் சூரி புகார் அளித்தார். மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். நீதிமன்ற உத்தரவுப்படி, இருவருக்கும் எதிராக, சென்னை, அடையாறு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை, சி.பி.ஐ., அல்லது வேறு ஏஜன்சி விசாரணைக்கு மாற்றக்கோரி, உயர் நீதிமன்றத்தில், சூரி மனு தாக்கல் செய்தார்.இம்மனு, நீதிபதி ரவீந்திரன் முன், விசாரணைக்கு வந்தது. போலீஸ் தரப்பிலான அறிக்கையை, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பிரபாவதி தாக்கல் செய்து, ''அடையாறு போலீசார் நேர்மையாக விசாரிக்கின்றனர்;
முன்னாள் டி.ஜி.பி.,க்கு எதிராக, ஆதாரம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை,'' என்றார்.சூரி தரப்பில், வழக்கறிஞர் இன்பேன்ட் தினேஷ் ஆஜராகி, ''சூரியிடம் உரிய ஆதாரங்கள் உள்ளன. ''சி.பி.ஐ.,க்கு உத்தரவிடும்பட்சத்தில், அங்கு ஒப்படைப்பார். விசாரணையை நீதிமன்றம் மேற்பார்வையிட்டால், அடையாறு போலீசாரிடம் அளிக்க தயார்,'' என்றார்.இதையடுத்து, ஆதாரங்களை அடையாறு போலீசாரிடம் ஒப்படைக்க, சூரிக்கு உத்தரவிட்டு, விசாரணையை, நான்கு வாரங்களுக்கு, நீதிபதி ரவீந்திரன் தள்ளிவைத்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE