''அக்கா...நம்மூர்ல தேர்தல் சூடு பிடிச்சுருச்சி...,''பேசியபடி, வீட்டுக்குள் ஸ்கூட்டரை நிறுத்தினாள் மித்ரா.
''மித்து, இன்னும் தேர்தல் தேதியே அறிவிக்கலை... அதுக்குள்ளே எப்படி,'' என, கேட்டாள் சித்ரா.
''நீ தொண்டாமுத்துார் வந்திருக்கணும். தி.மு.க., மகளிரணி செயலாளர் கனிமொழி, தேர்தல் பரப்புரைல அமர்க்களப்படுத்திட்டாங்க,''
''அப்படியா,'' என சித்ரா, வாயை பிளக்க, ''அக்கா, வரப்போற தேர்தலில், லேடீஸ் ஓட்டுகளும், கல்லுாரி மாணவர்களின் ஓட்டுகளுமே, வெற்றியை தீர்மானிக்கப் போகுது.அந்த இரு தரப்பு ஓட்டுகளையும் குறி வச்சு பிரசாரம் செய்றாங்க. மகளிர் சுய உதவிக்குழுக்களின் பிரச்னையை கையில் எடுத்திருக்கிறதுனால, ஆளுங்கட்சி தரப்பு ஆடிப்போயிருக்காம்,''
''ஆமாம், மித்து! கருணாநிதியும், ஜெ.,யும் ஆட்சியில் இருந்தப்ப, மகளிர் குழுக்களுக்கு மானிய கடன் வழங்குனாங்க; இப்ப, அப்படி வழங்குறதில்லையாம். அதனால, 'மைக்ரோ பைனான்ஸ்' பிடியில், மகளிர் குழுவினர் சிக்கியிருக்காங்க. லேடீஸ் ஓட்டுகளை அள்ளுறதுக்கு, இந்த பிரச்னையை தி.மு.க., கையில் எடுத்திருக்கு போல,''
''நீ சொல்றதை பார்த்தா, ஆளுங்கட்சி கோட்டையை தகர்த்தெறிஞ்சிருவாங்க போலிருக்கே,''
''அக்கா, ரஜினி அறிவிப்புக்கு முன்னாடி வரைக்கும், நிலைமை அப்படித்தான் இருந்துச்சு.இப்ப, ஓட்டுகளை பிரிச்சிருவாரோன்னு, தி.மு.க.,காரங்க புலம்பிட்டு இருக்காங்க. ரஜினி ரசிகர் மன்றத்தினரும், மன்றத்தைச் சேர்ந்தவங்களில் யார், யாரெல்லாம் எந்தெந்த கட்சியில் இருக்காங்க; ரஜினி கட்சி ஆரம்பிச்சதும் திரும்பி வந்துடுவாங்களா அல்லது, பழைய கட்சியிலேயே இருப்பாங்களான்னு, விசாரணை செஞ்சுக்கிட்டு இருக்காங்களாம்,''
''உளவுத்துறை போலீசாரும் கணக்கெடுத்ததா சொல்றாங்களே,''
''அதுவா, ரஜினி வாய்ஸ் மக்களிடம் எடுபடுமான்னு விசாரிச்சிருக்காங்க. அ.தி.மு.க., கூட்டணிக்கு 'சப்போர்ட்' பண்றதுக்கு வாய்ப்பு இருக்கா? ரஜினியை முதல்வர் வேட்பாளருன்னு சொன்னா, ஆதரவு கொடுப்பீங்களான்னு ஏகப்பட்ட கேள்விகளுக்கு, முக்கிய பிரமுகர்களிடம் கேட்டு, மேலிடத்துக்கு அறிக்கை கொடுத்திருக்காங்க,''
''ஆளுங்கட்சி தரப்பிலும் அதிருப்தி நிலவுதாமே,'' என்றபடி, 'ரிமோட்'டை அழுத்தி, மியூசிக் சேனலுக்கு 'டிவி'யை மாற்றினாள் சித்ரா.
''ஆமாக்கா, ரூ.5.3 கோடி செலவு செஞ்சு, சூலுார்ல, புதுசா பஸ் ஸ்டாண்ட் கட்டியிருக்காங்க. அதுல, முன்னாள் முதல்வர் ஜெ., இன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., அமைச்சர் வேலுமணி படங்களை வரைஞ்சிருக்காங்க; துணை முதல்வர் ஓ.பி.எஸ்., படம் வரையலை; அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருக்காங்க,''
''அரசு விழாக்களுக்கு 'சிட்டிங்' எம்.பி., நடராஜனை அழைக்கிறதில்லைன்னு, 'கசமுசா' ஓடிட்டு இருக்காமே,'' என, துருவினாள் சித்ரா.
''உண்மைதான்!
அவரு, மா.கம்யூ., கட்சிக்காரரு; எதிரணி கூடாரத்தை சேர்ந்தவருங்கிறதுனால, அழைப்பு விடுக்கறதில்லையாம். அழைப்பிதழ் அச்சடிச்சா, எம்.பி., நடராஜன், சிங்காநல்லுார் தி.மு.க., - எம்.எல்.ஏ., கார்த்திக் பெயரை குறிப்பிட்டாகனும். அதனால, அரசு விழாக்களுக்கு 'இன்விடேஷன்' அடிக்கறதே இல்லையாம்,''
''இனி, அரசு விழா எங்கு நடந்தாலும், அழையா விருந்தாளியா கலந்துக்கிறதுக்கு, 'காம்ரேடு'கள் முடிவு செஞ்சிருக்காங்களாம்,''
''தேர்தல் வரப்போகுதுல்ல; எல்லா கட்சிக்காரங்களும் அரசியல் செய்யத்தானே நினைப்பாங்க,'' என்ற சித்ரா, ''அவிநாசி ரோட்டில் மேம்பாலம் கட்டுறதுக்கு நடந்த பூமி பூஜையில், சி.பி.ஆர்., கலந்துக்கிட்டாராமே,'' என, நோண்டினாள்.
''கூட்டணி கட்சிக்காரராச்சே; ஆளுங்கட்சி தரப்புல அழைச்சாங்களாம்! மாலை அணிவிச்சு, கவுரவப்படுத்தி, மேடையில் முதல் வரிசையில் இருக்கை கொடுத்திருக்காங்க,''''மாஜி மேயரும் செம பார்முக்கு வந்திட்டிருக்காராமே,''
''இப்ப, ஆளுங்கட்சி வி.ஐ.பி.,யுடன் இணக்கமான உறவு ஏற்பட்டிருக்காம். இருந்தாலும், அவருக்கு மாலை போடுறதுக்கு, எம்.எல்.ஏ., அம்மன் அர்ச்சுணன் தயக்கம் காட்டியிருக்காரு. மேடையில், வடவள்ளிக்காரரும், 'மாஜி'யும் பக்கத்து பக்கத்து இருக்கையில் அமர்ந்து, 'பேசிக்கிட்டு' இருந்தாங்க,'' என்றபடி, சமையலறைக்குள் நுழைந்தாள் மித்ரா.
பின்தொடர்ந்து சென்ற சித்ரா, ''கலெக்டர் ஆபீசுல எத்தனை தடவை விண்ணப்பம் கொடுத்தாலும், தொலைஞ்சு போயிடுச்சு; மறுபடியும் கொடுங்கன்னு, மக்களை அலைக்கழிக்கிறாங்களாமே,'' என, கிளறினாள்.
''ஆமாக்கா, சமூக நலத்துறையில தான், இந்தக்கூத்து நடக்குது. 'யார் விண்ணப்பம் கொடுத்தாலும், தொலைஞ்சு போச்சு; மறுபடியும் விண்ணப்பிங்க'ன்னு சொல்றாங்க. மறுபடியும் விண்ணப்பிச்சாலும், மறுபடியும் தொலைஞ்சிடுச்சுன்னு சொல்றாங்களாம். ஒரு லேடி, மூணு தடவை விண்ணப்பம் கொடுத்திருக்காங்க; கலெக்டர் ஆபீசுக்கு நடையாய் நடக்குறாங்க.
இதுவரைக்கும் நிதியுதவி கிடைக்கலை,''''மித்து, அவுங்க 'எதிர்பார்க்குறதை' கொடுக்கலை போலிருக்கு; அது தெரியாம, அலையுறாங்கன்னு நெனைக்கிறேன்,''''ஆமாக்கா, அப்படித்தான் நானும் நினைக்கிறேன். சில விஷயங்கள், கலெக்டருக்கே தெரியாம நடக்குது போலிருக்கு,''
''அந்தளவுக்கு யாருக்கு துணிச்சல் இருக்கு; அப்படியெல்லாம் நடக்குறதுக்கு வாய்ப்பு இருக்கா, என்ன,''''இதை கேளு... கள்ளிமடை ஏரியாவுல சங்கனுார் பள்ளம் கிளை வாய்க்கால் போகுது; தண்ணீர் போகாததால், பொதுவழிப்பாதையா மக்கள் பயன்படுத்திட்டு வர்றாங்க. சிலர் ஆக்கிரமிக்க முயற்சி செய்றாங்க. தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்துக்கு புகார் போச்சு. கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்புனாங்க,''
''இந்த பிரச்னையில், அப்படி ஒரு சம்பவமே நடக்கலைன்னு, கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, பதில் அனுப்பியிருக்காங்க. இதை கேள்விப்பட்டு, கள்ளிமடை ஏரியா மக்கள் கடுங்கோபத்துல இருக்காங்க,''
''தேர்தல் வரப்போறதுனால, அதிகாரிகளை இட மாற்றம் செய்யப் போறாங்களாமே,'' என, 'ரூட்' மாறினாள் சித்ரா.''அக்கா, சில அதிகாரிகளை இப்பவே மாத்த ஆரம்பிச்சிட்டாங்க. வடக்கு ஆர்.டி.ஓ., சுரேஷை 'டிரான்ஸ்பர்' செஞ்சிட்டாங்க; இருந்தாலும், மாறுதலான பணியிடத்துக்கு இன்னும் போகலையாம். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக வந்த மனுக்கள், 'பெண்டிங்' ஆக இருக்குதாம்; பணியில் வேகமில்லைன்னு சொல்லி, மாத்தியிருக்கறதா சொல்றாங்க,'' என்றபடி, இஞ்சி டீ கோப்பையை நீட்டினாள் மித்ரா.
டீயை வாங்கி உறிஞ்சிய சித்ரா, ''ராமகிருஷ்ணா மில் ஏரியாவுல இருக்கற ரேஷன் கடையில் வேலை பார்க்குற பெண் பணியாளர், இட்லி மாவு தயாரிக்கிறவங்களுக்கு, இலவச அரிசியை விக்கிறாங்களாம். கார்டுதாரர்களுக்கு நிர்ணயித்த அளவை விட, குறைவா கொடுக்குறாங்களாம்.
''யாராவது கேட்டால், எங்கு வேண்டுமானாலும் புகார் செய்யுங்க; என்னை யாரும் அசைக்க முடியாதுன்னு சொல்றாராம்,'' என்றாள்.''அக்கா, ரேஷன் கடையில என்னைக்குதான், ஒழுக்கமா பொருள் கொடுத்திருக்காங்க,'' என்றபடி, வராண்டாவில் அமர்ந்து, நாளிதழ்களை புரட்ட ஆரம்பித்தாள் மித்ரா.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE