சிவகங்கை : வடகிழக்கு பருவ மழை, நிவர் புயல் மற்றும் மழையால் சிவகங்கையில் பெரிய பாதிப்பில்லை. இந்த மழை விவசாயத்தை செழிக்க செய்யும் விதமாக பாசன கண்மாய்கள் நிரம்பி வருவதன் மூலம் விவசாயிகள் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
வானம் பார்த்த பூமியான சிவகங்கை, கோடையில் சிவந்த மண்ணாக காட்சி அளிக்கும். மழையை மட்டுமே நம்பி பெரும்பாலான விவசாயிகள் வாழ்வாதாரம் நடத்துகின்றனர். இங்கு அதிகபட்சமாக பருவ மழையை நம்பி மானாவாரியாக நெல், பருத்தி, கடலை உள்ளிட்ட பயிர்கள் நடவு செய்யப்பட்டு வருகிறது.
நல்ல மழை பெய்து பெரியாறு, வைகை பாசன கால்வாயில் தண்ணீர் திறந்தால் மட்டுமே, வைகை பாசன விவசாயிகள் ஒருபோக நெல் சாகுபடி எடுக்க முடியும். அவர்களுக்கும் நிம்மதி தரும் விதத்தில் வடகிழக்கு பருவமழை, நிவர் புயல் மழையால் பெரியாறு, வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு, சிவகங்கை விவசாயிகள் பாசன வசதி பெற்று வருகின்றனர்.
நிரம்பி வரும் கண்மாய்கள்:
மாவட்டத்தில் வடகிழக்கு மற்றும் நிவர் புயல் மழையால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்காத வகையில், பாசன கண்மாய், ஊரணிகளில் மழை நீர் சேகரமாகி வருகின்றன. மாவட்ட அளவில் பொதுப்பணித்துறை, ஊராட்சி ஒன்றிய பாசன கண்மாய்கள் 5296 உள்ளன. இவற்றில் காரைக்குடியில் உள்ள செஞ்சை, அதலை, கோவிலுார் உட்பட 21 பொதுப்பணி கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்கின்றன.
160 கண்மாய்களில் 75 சதவீதத்திற்கு மேலும், 544 கண்மாய்களில் 50 முதல் 75 சதவீதம், 293 கண்மாய்களில் 50 சதவீதம், 2,453 கண்மாய்களில் 25 சதவீத மழை நீர் சேகரமாகியுள்ளது. 46 கண்மாய்கள் மட்டுமே வறண்டு கிடக்கின்றன.
நிம்மதி தந்த 'நிவர்' புயல்:
மாவட்டத்தில் இப்புயல் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தவில்லை. அவ்வப்போது நல்ல மழையை மட்டுமே வழங்கி சென்றது. இதனால், பெரிய அளவில் பாதிப்பு இன்றி மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர். அக்.,1 முதல் டிச.,7 வரை மாவட்டத்தில் 271 வீடுகள் பகுதி சேதாரமும், 23 வீடுகள் முழுவதும் சேதமடைந்துள்ளன. வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளன.
பசு, காளை, கன்று, ஆடு என கால்நடைகள் 24 இறந்துள்ளன. அவற்றிற்கும் அரசு சார்பில் இழப்பீடு வழங்கியுள்ளனர். புயல் பாதிப்பு பெரிய அளவில் ஏற்படாததால், சிவகங்கை மாவட்ட மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.தமறாக்கியில் நிவாரணம்:அமைச்சர் பாஸ்கரனின் சொந்தஊரான தமறாக்கியில், மழைக்கு வீடுகளை இழந்த குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கினார்.
கோட்டாட்சியர் முத்துகழுவன் முன்னிலை வகித்தார். எம்.ஜி.ஆர்., இளைஞரணி மாநில துணை செயலாளர் கருணாகரன் பங்கேற்றார். தாசில்தார் மயிலாவதி நிவாரண பணிக்கான ஏற்பாட்டை செய்திருந்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE