கோவை:ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யலாம் எனும் மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து வரும், 11ம் தேதி மருத்துவமனைகள் அடைக்கப்படும் என, இந்திய மருத்துவ சங்கம்(ஐ.எம்.ஏ.,) அறிவித்துள்ளது.
இந்திய மருத்துவ சங்க மாநில தலைவர் ராஜா, செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு கடந்த நவ., 19 -ம் தேதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், அலோபதி மருத்துவர்கள் செய்து வந்த அறுவை சிகிச்சைகளை, இனி ஆயுர்வேத மருத்துவர்களும் மேற்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.தேசிய கல்வி கொள்கையின் மூலம், ஆயுஷ் மருத்துவமுறையை பயின்ற மருத்துவ மாணவர்கள், தங்களின் விருப்பம் போல் அலோபதி மருத்துவ முறை படிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கலப்பட முறை மருத்துவத்தினால், மருத்துவ துறை பாதிக்கப்படும்.பயிற்சி பெற்ற மருத்துவர்களுடன் ஒப்பிடும் போது, ஆயுர்வேத அறுவை சிகிச்சை நிபுணர்களால், தரமான மற்றும் ஆபத்து இல்லாத சிகிச்சையை தர முடியாது. இது ஆயுஷ் மருத்துவ முறையையும் பாதிக்கும்.இந்த அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் உள்ள, 20 ஆயிரம் தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளில் புறநோயாளிகள் பிரிவு வரும், 11-ம் தேதி காலை, 6:00 முதல் மாலை 6:00 மணி வரை செயல்படாது. கோவையில் 530 மருத் துவமனைகள், கிளினிக்குகள் இயங்காது. இருப்பினும், கொரோனா தொற்றினால் அவசர சிகிச்சைகள் மட்டும் அளிக்கப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்,
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE